ஊரடங்கு தளர்வுகள் எதிரொலி : தமிழகத்தில் 18ம் தேதி முதல் டாஸ்மாக் பார்கள் திறப்பு?

  • In General
  • September 3, 2020
  • 148 Views
ஊரடங்கு தளர்வுகள் எதிரொலி : தமிழகத்தில் 18ம் தேதி முதல் டாஸ்மாக் பார்கள் திறப்பு?

ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் தமிழகத்தில் வரும் 18ம் தேதி முதல் டாஸ்மாக் பார்களை திறக்க அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு வரும் 30ம் தேதி வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு நீட்டிக்கப்பட்டாலும் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்து வருகிறது.

அதன்படி, செப்டம்பர் 1ம் தேதி முதல் இ-பாஸ் ரத்து, பேருந்து சேவை ஆகியவற்றை அறிவித்தது. இதேபோல், நேற்று தமிழகத்திற்குள் பேருந்து சேவை, ரயில் சேவை உள்ளிட்ட தளர்வுகளும் அறிவிக்கப்பட்டது.மேலும், கடந்த மே 7ம் தேதி டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டது.தற்போது தமிழகம் முழுவதும் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றது. ஆனால், டாஸ்மாக் கடைகளுடன் இணைந்த பார்களை திறக்க அரசு அனுமதி கொடுக்கவில்லை.

மேலும், 8ம் கட்ட ஊரடங்கில் அரசு வெளியிட்ட தடை உத்தரவிற்கான அறிவிப்பில் பார்கள் தடை நீட்டிப்பு குறித்த அறிவிப்பும் இடம்பெறவில்லை. இதனால், தமிழகத்தில் டாஸ்மாக் பார்களை மீண்டும் திறக்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக கூறப்பட்டது. இதேபோல், டாஸ்மாக் பார்களை திறக்கக்கோரி பார் உரிமையாளர்களும் டாஸ்மாக் நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்து வந்தனர். இந்தநிலையில், தமிழகத்தில் வரும் 18ம் தேதி முதல் டாஸ்மாக் பார்களை திறக்க அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பார்கள் திறக்கப்படும் போது சமூக இடைவெளி, குறைந்த நபர்களுக்கு மட்டுமே அனுமதி, முகக்கவசம் உள்ளிட்டவைகள் கட்டாயமாக்கப்பட உள்ளது. பார்கள் திறப்பு குறித்த அறிவிப்பு வரும் 15ம் தேதி வெளியாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்