வீடுதேடி வரும் ஐயப்பன் கோயில் பிரசாதம்.. ஆன்லைனில் முன்பதிவு

வீடுதேடி வரும் ஐயப்பன் கோயில் பிரசாதம்.. ஆன்லைனில் முன்பதிவு

சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு கோயில் பிரசாதங்கள் அனைத்து பக்தர்களுக்கும் சென்று சேரும் வகையில், தபால் துறை மற்றும் திருவிதாங்கூர் தேவசம்போர்டு மூலமாக அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.

கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆண்டுதோறும் மண்டலபூஜை மற்றும் மகரவிளக்கு பூஜைக்கு தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்வது வழக்கம்.இங்கு வரும் பக்தர்கள் ஐயப்பனை தரிசித்துவிட்டு, அப்பம், அரவணை போன்ற பிரசாதங்களை வீட்டிற்கு வாங்கிச் செல்வர்.

ஆனால் இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக இம்மாதம் 16ஆம் தேதி முதல் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் தினசரி 1000 பக்தர்களுக்கும் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் 2000 பேருக்கும், மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு பூஜைக்கு 5000 பேருக்கும் தரிசனம் செய்ய அனுமதி அளித்துள்ளது. அதேபோல மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜையில் கலந்து கொள்ள 85000 பேர் முன்பதிவு செய்துள்ளனர்.

பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் கோயில் பிரசாதங்களை பெற்றுக்கொள்ளும் வகையில் இந்திய தபால் துறை மற்றும் திருவிதாங்கூர் தேவசம் போர்டு மூலமாக, பிரசாதங்களை அவர்களது வீடுகளுக்கு இந்த மாதம் 16-ஆம் தேதி முதல் கொண்டு சேர்க்க திட்டமிட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து நேற்று இணையதளங்கள் வழியாக முன்பதிவு செய்பவர்களுக்கு அப்பம், அரவணை, அபிஷேகம் செய்த நெய், குங்குமம், விபூதி, களபம், சந்தனம் போன்ற பிரசாதங்கள் அடங்கிய கிட் அனுப்பி வைக்கப்படும். இத்திட்டத்திற்கான இணையதள முன்பதிவை நேற்று திருவனந்தபுரத்தில் கேரள இந்து அறநிலையத்துறை அமைச்சர் கடகம் பள்ளி சுரேந்திரன் துவங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் தபால்துறை மூத்த அதிகாரிகள் மற்றும் தேவசம் போர்டு உயர் அதிகாரிகளும் பங்கேற்றனர். இந்த சாமி பிரசாத கிட் ஒன்றுக்கு 450 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இந்த சேவையை இந்தியாவில் உள்ள எந்த தபால் நிலையம் வழியாகவும் பெற்றுக் கொள்ளலாம்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்