வீராணம் ஏரிக்கு காவிரி தண்ணீர் திறக்க வாய்ப்பு

வீராணம் ஏரிக்கு காவிரி தண்ணீர் திறக்க வாய்ப்பு

சென்னை:
சென்னையில் நிலவி வரும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்குவதற்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில் காவிரி தண்ணீரை வீராணம் ஏரிக்கு கொண்டு வருவதற்கு தமிழக அரசு ஆலோசனை நடத்தி வருகிறது.

காவிரி தண்ணீரை சென்னை குடிநீருக்கு கொண்டு செல்ல வீராணம் திட்டம் ஏற்கனவே செயல்பாட்டில் உள்ளது.

மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் முக்கொம்பு மற்றும் கல்லணை வழியாக கொள்ளிடத்திற்கு அனுப்பப்பட்டு கீழணையில் இருந்து வீராணம் ஏரிக்கு கால்வாய் மூலம் கொண்டு வரப்படுகிறது.

அங்கிருந்து குழாய் மூலம் சென்னைக்கு தண்ணீர் அனுப்பப்படுகிறது. இவ்வாறு ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 180 மில்லியன் லிட்டர் தண்ணீர் அனுப்பப்பட்டு வந்தது.

அதே நேரத்தில் வீராணத்திலும் தண்ணீரின் அளவு மிகவும் குறைந்து விட்டது. தற்போது 102 மில்லியன் கன அடி தண்ணீர் மட்டுமே வீராணம் ஏரியில் உள்ளது.

ஏரியில் தண்ணீர் அளவு குறைவாக இருப்பதால் சென்னைக்கு அனுப்பப்படும் தண்ணீரின் அளவும் 80 மில்லியன் லிட்டராக குறைக்கப்பட்டு விட்டது.

எனவே வீராணம் ஏரிக்கு புதிதாக தண்ணீர் வந்தால் மட்டுமே சென்னைக்கு குடிநீர் அனுப்பமுடியும் என்ற நிலை உள்ளது.

இந்நிலையில் கர்நாடகாவில் இருந்து மேட்டூர் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து வருகிறது.
இதில் ஒரு பகுதியை சென்னை குடிநீருக்கு அனுப்ப ஆலோசிக்கப்பட்டு வருகிறது. அதன்படி ஒரு டி.எம்.சி. அளவிற்கு தண்ணீர் திறக்கப்பட்டு அதை வீராணம் மூலமாக சென்னைக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளனர்.

இது சம்பந்தமாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விரைவில் உத்தரவு பிறப்பிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்