விசிக சுவரொட்டிகள் கிழிப்பு

விசிக சுவரொட்டிகள் கிழிப்பு

ஒசூர்:

ஓசூர் தனியார் பள்ளி கட்டிட பணியில் ஈடுபட்ட தொழிலாளர்களுக்கு கூலி வழங்கக்கோரி விசிகவினர் ஒட்டிய சுவரொட்டிகள் கிழிக்கப்பட்டதால் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் போலீசில் புகாரளித்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த புக்கசாகரம் கிராமத்தில் இயங்கி வருகிறது சிபிஎஸ்இ தனியார் பள்ளி,இந்த பள்ளி கட்டுமான பணிகளில் ஈடுபட்ட கூலி தொழிலாளிகளுக்கு 13 லட்சம் ரூபாய் வரை பணம் வழங்கப்படாமல் நிலுவையில் வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

பலமுறை கேட்டும் பணம் வழங்காத பள்ளி நிர்வாகத்தினர் மீது கூலி தொழிலாளிகள் சார்பில் ஏற்கனவே புகார் அளித்துள்ளதாக கூறப்படுகிறது, கூலித்தொழிலாளிகளுக்கு பணம் வழங்க வலியுறுத்தி புக்கசாகரம் கிராமத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன சுவரொட்டிகளை ஞாயிறு அன்று ஒட்டியதாக சொல்லப்படுகிறது.

இதனை நேற்று இரவு மர்மநபர்கள் விசிக சுவரொட்டிகளை கிழித்துள்ளனர், இதனால் ஆத்திரமடைந்த விசிகவினர் தனியார் பள்ளி நிர்வாகத்தினரின் தூண்டுதல் பேரிலேயே சுவரொட்டிகள் கிழித்திருப்பதாக கூறி, வேப்பனஹள்ளி சட்டமன்ற தொகுதி செயலாளர் செம்பட்டி சிவா தலைமையிலான விசிகவினர் சுவரொட்டி கிழித்தவர்களை கைது செய்யுமாறு பேரிகை காவல்நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளனர்.

காவல்துறையினர் நடவடிக்கை எடுக்காவிட்டால் கிருஷ்ணகிரி மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் போராட்டங்களை முன்னெடுக்க இருப்பதாகவும் தெரிவித்தனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்