தென்பெண்ணை கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

தென்பெண்ணை கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

ஓசூர்:

கெலவரப்பள்ளி அணையிலிருந்து தென்பெண்ணை ஆற்றில் நீர் திறக்கப்பட்டுள்ளதால், ஆற்றை ஒட்டியுள்ள மக்களுக்கு தண்டோரா மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே உள்ள கெலவரப்பள்ளி நீர் தேக்க அணைக்கு, தென்பெண்ணை உற்ப்பதியாகும் நந்திமலை மற்றும் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் நீர்வரத்து அதிகரித்து வருகிறது.

கடந்த ஒருவாரமாகவே கெலவரப்பள்ளி அணைக்கு வரும் நீர் முழுமையாக அப்படியே கெலவரப்பள்ளி அணையில் வெளியேற்றப்பட்டு வருகிறது. ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த 15 நாட்களில் நீரில் அடித்து செல்லப்பட்டோர், ஏரி குளம் உள்ளிட்டவைகளில் மூழ்கி 20 பேர் பலியாகியுள்ளனர்.

நீர்நிலைகளின் அருகில் சிறுவர்களை விளையாடுவதை பெற்றோர்கள் தவிர்க்க வேண்டுமென கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியரும் அறிவுறுத்தி உள்ள நிலையில், இன்று கெலவரப்பள்ளி அணைக்கு வரும் 1,368 கனஅடி நீர் தென்பெண்ணை ஆற்றில் வெளியேற்றி வருவதால், தென்பெண்ணை ஆறு பாயும் பேரண்டப்பள்ளி, கோப்பச்சந்திரம், பாத்தக்கோட்டா உள்ளிட்ட பகுதிகளில் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

கெலவரப்பள்ளி அணையை சுற்றிப்பார்க்க வரும் சுற்றுலா பயணிகளுக்கும் பொதுப்பணித்துறையினர் அறிவுறுத்தி வரும் நிலையில், இன்று வருவாய்த்துறை சார்பில் கெலவரப்பள்ளி அணையை ஒட்டியுள்ள சித்தனப்பள்ளி, தட்டனப்பள்ளி, கெலவரப்பள்ளி உள்ளிட்ட கிராம மக்கள் ஆற்றுப்பகுதிக்கு செல்வதை தவிர்த்து, நீரில் விளையாட குழந்தைகளை அனுமதிக்க விடாமல் பாதுகாப்பாக இருக்க தண்டோரா மூலம் எச்சரிக்கை விடப்பட்டு வருகிறது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்