சிறை விதிகளின்படி சலுகை; சசிகலா விரைவில் ‘ரிலீஸ்!’

சிறை விதிகளின்படி சலுகை; சசிகலா விரைவில் ‘ரிலீஸ்!’

சொத்து குவிப்பு வழக்கில், நான்காண்டு சிறை தண்டனை பெற்ற சசிகலா, கர்நாடக மாநிலம், பெங்களூரு, பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறைவாசிகளுக்கு வழங்கப்படும் சலுகைகள் அடிப்படையில், அவர் விரைவில் விடுதலையாக உள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.அவருக்கு நீதிமன்றம் விதித்த, அபராதத் தொகை, 10 கோடி ரூபாயை செலுத்தி, அவரை விரைவாக சிறையில் இருந்து வெளியில் அழைத்து வர, அவரது வழக்கறிஞர்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.இது குறித்து, சசிகலா வழக்கறிஞர் ராஜாசெந்துார் பாண்டியன் கூறியதாவது: கடைசியாக, மார்ச் 7ல் சசிகலாவை பார்த்தேன். அதன்பின், கொரோனா காரணமாக சிறைவாசிகளை, வழக்கறிஞர்களோ, அவர்கள் குடும்பத்தினரோ சந்திக்க, சிறை நிர்வாகம் அனுமதிக்கவில்லைமீண்டும் அனுமதி கிடைத்ததும், சிறைக்கு சென்று, அவரை சந்திப்பேன்.கடந்த ஆண்டு அக்டோபரிலேயே சசிகலா, மூன்றில் இரண்டு பங்கு சிறை தண்டனையை அனுபவித்து விட்டார். எனவே, சிறை தண்டனை குறைப்பு சலுகை பெற தகுதி பெறுகிறார். அதன் அடிப்படையில், அவரை வெளியில் அழைத்து வருவதற்கான, சட்டப் பணிகளை செய்து வந்தேன்.மார்ச் இறுதியில், முடிவு தெரியும் சூழல் இருந்தது. மார்ச் இரண்டாம் வாரத்தில் இருந்து, அனுமதி வழங்கப்படாததால், சிறை நிர்வாகம் என்ன முடிவெடுத்தது என்பது தெரியவில்லை.

முடிவு எடுக்கப்பட்டிருந்தால், தகவல் வந்திருக்கும்; நேரில் செல்லும்போது தகவல் தெரியும்.சசிகலாவிற்கு சாதாரண சலுகைகள் வழங்கினாலே, அவர் வெளியில் வர முடியும். கர்நாடக சிறைத் துறை, ஒரு மாதத்திற்கு மூன்று நாட்கள் வீதம், தண்டனை குறைப்பு சலுகை வழங்குகிறது. இது, அனைத்து சிறைவாசிகளுக்கும் பொருந்தும்.ஊழல் தடுப்பு பிரிவு குற்றத்தின் கீழ் தண்டிக்கப்பட்ட நபர்களுக்கு, எவ்வித சலுகையும் கிடையாது என, விதிகளில் எதுவும் குறிப்பிடவில்லை. இம்மாதம் வரை, 43 மாதங்கள் சிறை வாசத்தை முடிக்கிறார்.அதன் அடிப்படையில், 129 நாட்கள் தண்டனை குறைப்பு வரும். பரோலில் வந்த, 17 நாட்கள் கழித்து, சிறை விதிகளின் அடிப்படையில், இம்மாதம் இறுதியில், அவர் வெளியே வருவதற்கு, அதிகமான வாய்ப்புகள் உள்ளன. இவ்வாறு, அவர் கூறினார்.சிறையிலிருந்து இம்மாத இறுதியில் சசிகலா வெளியே வந்த பிறகு, அ.தி.மு.க.,வில் மாற்றம் இருக்குமா, அதற்கு முதல்வர் இ.பி.எஸ்., ஒப்புக் கொள்வாரா என்பது, விரைவில் தெரிய வரும்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்