பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டிக்கு முன்பு சிஎஸ்கே அணியின் இளம் வீரர் சாம் கரன் அளித்த பேட்டியொன்று தற்போது வைரலாகி வருகிறது.
நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து சிஎஸ்கே அணி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதிப் பெறாமல் வெளியேறிவிட்டாலும் தங்களுடைய கடைசி 3 போட்டிகளில் சிறப்பான வெற்றியைப் பெற்றது. புள்ளிகள் பட்டியலில் 7ஆம் இடத்தை பெற்றுள்ளது. பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதிப் பெறாவிட்டாலும், சிஎஸ்கே அணி மற்ற சில அணிகளின் பிளே ஆஃப் கனவை பொய்யாக்கியது.
இதில், சிஎஸ்கேவிடம் தோல்வியடைந்த பஞ்சாப் அணி தொடரில் இருந்து வெளியேறியது.கொல்கத்தாவுக்கு இன்னும் கூட பிளே ஆஃப் வாய்ப்பு ஊசலாடி கொண்டு இருக்கிறது.
இந்நிலையில், பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டிக்கு முன்பு சிஎஸ்கேவின் இளம்வீரரும், ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் சுட்டிக்குழந்தையுமான சாம் கரன் அளித்தப் பேட்டியொன்று வைரலாகிறது. அந்தப் பேட்டியில், “இன்று சிறப்பான நாளாக இருக்கும். இன்றையப் போட்டியில் நாங்கள் பஞ்சாபை வென்றால். அவர்கள் தொடரில் இருந்து வெளியேறுவார்கள்” என்றார்.
மேலும் “இதுபோல நிகழ்ந்தால் அது எங்களுக்கு உத்வேகமாக அமையும். மற்ற அணியின் கொண்டாட்டத்தை பாழாக்குவதிலும் ஒரு சந்தோஷம் இருக்கத்தான் செய்யும். ஐபிஎல்லில் ஒவ்வொரு போட்டியும் முக்கியமானதுதான். அது ஒரு பெருமையும் கூட. இதேபோல கொல்கத்தாவை வீழ்த்தினோம். அதனால் அவர்களின் பிளே ஆஃப் கனவு ஊசலில் இருக்கிறது. இப்போது பஞ்சாபை வென்றால் சந்தோஷமாக இருக்கும்” என்றார் சாம் கரன்.