காவலாளியே திருடன் விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் மன்னிப்பு கோரினார் ராகுல் காந்தி!

காவலாளியே திருடன் விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் மன்னிப்பு கோரினார் ராகுல் காந்தி!

ரபேல் வழக்கு தீர்ப்பில் காவலாளியே திருடன் என உச்ச நீதிமன்றமே குறிப்பிட்டதாக பேசிய விவகாரத்தில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியுள்ளார்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தேர்தல் பிரச்சாரத்தின்போது பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்து வருகிறார். ரபேல் வழக்கு தீர்ப்பில் உச்ச நீதிமன்றமே பிரதமர் மோடியை காவலாளியே திருடன் என்று குறிப்பிட்டுள்ளதாக தேர்தல் பிரச்சாரத்தில் பேசினார்.

இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு பாஜக, தலைவர்கள் கடும் கண்டனத்தை பதிவு செய்தனர். இந்த விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் பாஜக. எம்பி மீனாட்சி லேகி வழக்கு தொடர்ந்தார்.

கடந்த மாதம் 23ந் தேதி நடந்த இந்த வழக்கு விசாரணையின்போது, தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவிப்பதாக ராகுல் காந்தி பிரமாண பத்திரம் தாக்கல் செய்தார். தேர்தல் பிரச்சாரத்தின்போது ரபேல் வழக்கு உத்தரவு குறித்து குறிப்பிட்டு பேசமாட்டேன் என்று உறுதி கொடுத்தார். ஆனால், இதற்கு வழக்கு தொடர்ந்த மீனாட்சி லேகி எதிர்ப்பு தெரிவித்தார். இது கண்துடைப்பு பதில் என்று வாதிட்டார்.

ராகுல் காந்தியின் பிரமாண பத்திரத்தில் தெரிவித்துள்ள பதில்கள் திருப்தி இல்லை என்று உச்ச நீதிமன்றம் கூறியது. இதுதொடர்பாக, அவர் விரிவான விளக்கம் அளிக்க நோட்டீஸ் அனுப்புமாறு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு உத்தரவிட்டது.

கடந்த 30ந் தேதி நடந்த விசாரணையின்போது ராகுல் காந்தி மன்னிப்பு கோருவதற்கான புதிய பிரமாண பத்திரம் தாக்கல் செய்வதாக அவரது சார்பில் ஆஜரான அபிஷேக் மானு சிங்வி கூறி இருந்தார். மேலும், ராகுல் காந்தி சார்பில் வருத்தமும் தெரிவித்தார்.

இதற்காக, உச்சநீதிமன்றத்திடம் நிபந்தனையற்றை மன்னிப்பு கோருகிறேன். எந்த ஒரு உள்நோக்கத்துடனும், திட்டமிட்டு நீதிமன்ற தீர்ப்பை குறிப்பிட்டு பேசவில்லை. மேலும், உச்சநீதிமன்றத்தின் மீது மிகுந்த மதிப்பு வைத்துள்ளதாகவும், தன் மீதான இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முடித்து வைக்குமாறும் ராகுல் காந்தி கோரியுள்ளார்.

இதனிடையே, கடந்த சில நாட்களுக்கு முன் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, காவலாளி திருடன் விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை குறிப்பிட்டு, தான் தவறு செய்துவிட்டதாகவும், உச்சநீதிமன்றத்திடம் மன்னிப்பு கோர இருப்பதாவும் அவர் தெரிவித்தார்.

அதேசமயம், தான் பேசியதற்காக பிரதமர் மோடியிடமோ அல்லது பாஜக.,விடமோ மன்னிப்பு கோரமாட்டேன். தானும், தனது கட்சியும் பிரதமர் மோடியை காவலாளியே திருடன் என்ற பிரச்சாரத்தை தொடர்ந்து செய்வோம்,” என்று கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்