பெண் காவலர் தற்கொலை முயற்சி

பெண் காவலர் தற்கொலை முயற்சி

ஓசூர்:

ஒசூர் அருகே பெண் காவலர் தற்கொலைக்கு முயற்சித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்த அஞ்செட்டி அருகே உள்ள பாண்டுரங்கன்தொட்டி கிராமத்தை சேர்ந்தவர்கள் கண்ணன்(29) – நதியா(24) இவர்கள் இருவரும் ஒரே சமூகத்தை சேர்ந்த உறவினர்கள்.

கண்ணன் கிருஷ்ணகிரி மாவட்ட மோப்பநாய் பிரிவிலும், நதியா ஓராண்டாக திருப்பூர் மாவட்ட ஆயுதப்படை பிரிவிலும் இரண்டாம் நிலை காவலர்களாக பணியாற்றி வருகின்றனர்.

2016 ஆம் ஆண்டு முதல் இருவருக்கும் காதல் மலர்ந்த நிலையில் பிஎட் கல்லூரி படிப்பை கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தொடர கண்ணன் வற்புறுத்தியதின் பேரில் நதியா பிஎட் பயின்றதாகவும் அப்போது வாடகை அறையில் இருந்த நதியாவை சந்திக்க கண்ணன் அடிக்கடி சென்று வந்ததாக கூறப்படுகிறது.

2018 ஆம் ஆண்டு சீறுடை காவலர் பணிக்கான தேர்வினை எழுத கண்ணன் கேட்டுக்கொண்டதின் பேரில் நதியாவும் தேர்வெழுதி தேர்ச்சி பெற்றுள்ளார்.தேர்வு பயிற்சி உள்ளிட்டவைகளுக்கான முழு செலவினையும் கண்ணனே ஏற்று செய்ததாக கூறப்படுகிறது.

கண்ணன் கிருஷ்ணகிரி மாவட்டத்திலும், நதியா திருப்பூரிலும் காவலர்களாக பணியாற்றி வந்தபோதும், தொடர்ந்து காதலித்து வந்த இவர்கள் அடிக்கடி சந்தித்து தனிமையிலும் இருந்ததாக கூறுகிறார் நதியா.

காதல் என்கிறவரை மகிழ்ச்சியாக இருந்த கண்ணனுக்கு திருமணம் என்கிற வார்த்தை மட்டுமே பிடிக்காமல் போய் உள்ளது.

திருமணம் செய்துக்கொள்ள நதியா வற்புறுத்திய பிறகு கண்ணன் நதியாவுடன் பேசுவதை தவிர்த்து, வேறு ஒரு நபரை திருமணம் செய்துக்கொள்ளுமாறு கூறிவிட்டதாக சொல்லப்படுகிறது.

காதலனுக்காக பிஎட் படிப்பையும், காவலர் தேர்வையும் எழுதி தேர்ச்சி பெற்று காவலராக பணியாற்றியபோதும் கண்ணன் திருமணத்திற்கு மறுத்ததால் மனமுடைந்த நதியா இன்று காலை பாண்டுரங்கன்தொட்டி கிராமத்தில் உள்ள தனது வீட்டிலேயே விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்று உள்ளார்.

அதிர்ச்சி அடைந்த நதியாவின் பெற்றோர் உடனடியாக மீட்டு தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

ஆபத்தான நிலையை தாண்டிய நதியா, 4 ஆண்டுகளாக காதலித்து வந்த கிருஷ்ணகிரி மாவட்ட மோப்பநாய் பிரிவு காவலர் கண்ணனை திருமணம் செய்து மகிழ்ச்சியாக வாழ வேண்டுமென்பதையே ஆசையாக கொண்டுள்ளார்.

இதுக்குறித்து தேன்கனிக்கோட்டை டிஎஸ்பி சங்கீதா, காவலர் கண்ணனிடம் விசாரணை நடத்தி வருகிறார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்