கல்வி கட்டணத்திற்காக குழந்தைகளை நிதி நிறுவனங்களிடம் அடகு வைப்பதா?

கல்வி கட்டணத்திற்காக குழந்தைகளை நிதி நிறுவனங்களிடம் அடகு வைப்பதா?

தமிழ்நாட்டில் ஊரடங்கு நீக்கப்படும் வரை, கல்விக் கட்டணம் செலுத்தும்படி பெற்றோரை கட்டாயப்படுத்தக் கூடாது என தனியார் பள்ளிகளை அரசு எச்சரித்துள்ள நிலையில், பெற்றோர்களிடம் கட்டணம் வசூலிப்பதற்காக பல தனியார் பள்ளிகள் புதுப்புது உத்திகளை கடைபிடித்து வருகின்றன. அவற்றில் நவீன உத்தியாக கட்டணத்தை நிதி நிறுவனங்களிடம் மொத்தமாக பெற்றுக்கொள்ளும் பள்ளிகள், அதை வட்டியுடன் சேர்த்து தவணைகளில் நிதி நிறுவனங்களிடம் செலுத்தும்படி பெற்றோரைக் கட்டாயப்படுத்துவது கண்டிக்கத்தக்கது.

மும்பையை சேர்ந்த தனியார் நிதி நிறுவனத்துடன் தமிழகத்தைச் சேர்ந்த, அதிக கட்டணம் வசூலிக்கக் கூடிய பிரபல பள்ளிகள் கூட்டாண்மையை ஏற்படுத்திக் கொண்டு இத்திட்டத்தை செயல்படுத்துகின்றன.இத்திட்டத்தின்படி ஒரு பள்ளியில் 1000 மாணவர்கள் படிப்பதாகவும், ஒவ்வொரு மாணவனும் செலுத்த வேண்டிய சராசரி கட்டணம் ரூ.50,000 என்றும் வைத்துக் கொண்டால், அந்த பள்ளிக்கு ஓராண்டு முழுவதும் செலுத்த வேண்டிய கட்டணத் தொகையான ரூ.5 கோடியை தனியார் நிதி நிறுவனம் மொத்தமாக செலுத்தி விடும். அந்தத் தொகையை 12 மாதத் தவணைகளில் பெற்றோர்களிடமிருந்து தனியார் நிதி நிறுவனம் வசூலித்துக் கொள்ளும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த திட்டத்தில் இணையும்படி பெற்றோர்களை தமிழகத்திலுள்ள ஏராளமான தனியார் பள்ளிகள் கட்டாயப்படுத்துவதாக கூறப்படுகிறது.

மேலோட்டமாக பார்க்கும் போது பெற்றோருக்கு உதவும் வகையில் இத்திட்டம் தயாரிக்கப்பட்டிருப்பதைப் போலத் தெரியும். ஆனால், இது ஒரு வகையில் கந்து வட்டித் திட்டம் ஆகும். ஒரு பள்ளிக்கு ஓராண்டு கட்டணமாக ரூ. 5 கோடியை வழங்கும் தனியார் நிறுவனம், அதில் 12 விழுக்காட்டை, அதாவது ரூ.60 லட்சத்தை பிடித்தம் செய்து கொள்ளும். பிடித்தம் செய்யப்படும் தொகை 12% மட்டும் தான் என்றாலும் கூட, அது முன்கூட்டியே பிடித்தம் செய்யப்படுவதாலும், ஒவ்வொரு மாதமும் பெற்றோர்கள் மூலம் அசல் தொகையை செலுத்தப்படுவதாலும் அனைத்து தவணைகளும் செலுத்தி முடிக்கப்படும் போது வட்டி விகிதம் 19.72% ஆக இருக்கும். இந்த வட்டியை பள்ளி நிர்வாகங்களே ஏற்றுக் கொள்வது போன்று தோற்றம் ஏற்படுத்தப்படுகிறது. ஆனால், எந்த பள்ளி நிர்வாகமும் இந்த வட்டியை ஏற்றுக்கொள்வதில்லை.

மாறாக, இந்த வட்டித்தொகையை சமன் செய்வது போல கட்டணத்தை உயர்த்தி மாணவர்கள் தலையில் தான் சுமத்துகின்றன. அதுதவிர பரிசீலனைக் கட்டணம் என்ற பெயரில் 3 விழுக்காடு வசூலிக்கப் படுகிறது. ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் கல்விக்கட்டணத்தின் மீது நேரடியாகவும், மறைமுகமாகவும் 22.72% வரை வட்டி வசூலிக்கப்படுகிறது. இது கந்து வட்டிக்கு ஒப்பானது; இது பெரும் அநியாயம்.

தனியார் நிதிநிறுவனம் வழங்கும் கடனுக்கு ஈடாக எதுவும் வழங்கத் தேவையில்லை என்று தனியார் நிதி நிறுவனம் தரப்பில் கூறப்படுகிறது. ஆனால், பெற்றோர்களிடமிருந்து சில ஆவணங்கள் பெறப்படுவதுடன், ஒப்பந்தப் படிவத்தில் கையெழுத்தும் பெறப்படுகிறது. ஒருவேளை பெற்றோர்களால் இந்த கட்டணத்தை செலுத்த முடியாமல் போனால், அவர்கள் குழந்தைகளின் சான்றிதழ்களை பள்ளி நிர்வாகம் முடக்கி வைக்கும் ஆபத்து உள்ளது. இது குழந்தைகளை அடகு வைப்பதற்கு சமமானதாகும். கல்வி வழங்க வேண்டிய பள்ளிகள் பெற்றோர் மீது கந்து வட்டியை திணிப்பது கண்டிக்கத்தக்கதாகும்.

தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக மார்ச் 24-ஆம் தேதி நள்ளிரவு முதல் ஊரடங்கு ஆணை நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கும் போதிலும், அதற்கு சில வாரங்களுக்கு முன்பே தொழில் முடக்கம் தொடங்கி விட்டது. தமிழகத்தில் 90 விழுக்காட்டுக்கும் கூடுதலானவர்கள் அமைப்பு சாராத தொழில்களையே தங்களுக்கான வாழ்வாதாரமாகக் கொண்டிருப்பவர்கள் என்பதால், அவர்கள் கடந்த இரு மாதங்களுக்கு மேலாக வருவாய் இழந்து தவிக்கின்றனர். அன்றாட உணவு உள்ளிட்ட தேவைகளுக்கே அரசின் உதவியையும், மற்றவர்களின் உதவியையும் எதிர்பார்த்திருக்கும் அவர்களிடம் கல்விக்கட்டணத்தை உடனடியாக செலுத்தும்படி கட்டாயப்படுத்துவது எந்த வகையிலும் நியாயமல்ல. அவர்களிடம் கல்விக் கட்டணம் வசூலிக்க அரசு அனுமதிக்கக்கூடாது என்று நான் வலியுறுத்தியதை ஏற்று, ஊரடங்கு காலம் முடியும் வரை கல்விக் கட்டணம் செலுத்தும்படி பெற்றோரை கட்டாயப்படுத்தக் கூடாது என்று தேசியப் பேரிடர் மேலாண்மை சட்டத்தின்படி ஏப்ரல் 20-ஆம் தேதி அரசு ஆணையிட்டிருந்தது.

அதை மீறி கட்டணம் வசூலிப்பதே தவறு எனும் நிலையில், கந்து வட்டியும் செலுத்தும்படி கட்டாயப் படுத்துவது எந்த வகையில் நியாயம்? இந்த அநீதி தடுத்து நிறுத்தப்பட வேண்டும். பெற்றோர்களிடம் கல்விக் கட்டணம் வசூலிக்கக்கூடாது என்று வார்த்தைகளில் மட்டும் அரசு எச்சரித்துக் கொண்டிருந்தால் போதாது. கல்விக் கட்டணம் செலுத்த வேண்டும் என்று கட்டாயப்படுத்துவதுடன், அதற்காக கந்து வட்டிக்கு கடன் வாங்கவும் வலியுறுத்தும் பள்ளிகள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்