ஜானகி கல்லூரியில் நடிகர் சங்க தேர்தலுக்கு அனுமதி மறுப்பு!

ஜானகி கல்லூரியில் நடிகர் சங்க தேர்தலுக்கு அனுமதி மறுப்பு!

சென்னை:

நடிகர் சங்க தேர்தலை எம்ஜிஆர் ஜானகி கல்லூரியில் நடத்த சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி மறுத்துள்ளது.

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் வரும் 23ம் தேதி சென்னை அடையாறில் உள்ள எம்ஜிஆர் ஜானகி கல்லூரியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

நடிகர் சங்க தேர்தலுக்கு பாதுகாப்பு கோரி சென்னை காவல்  ஆணையருக்கு உத்தரவிடக்கோரி, நடிகர் விஷால் தலைமையில் சென்னை உயர்நீதிமன்றத்தில்தொடர்ந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தது.

விசாரணையில், எம்.பி., எம்.எல்.ஏ தேர்தலை விட நடிகர் சங்க தேர்தலுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்படுகிறது என்று குறிப்பிட்ட நீதிபதி, நடிகர் சங்க தேர்தலை பற்றி கவலையில்லை எனவும், மக்களின் பாதுகாப்பே முக்கியம் எனவும் தெரிவித்தார்.

மேலும், பொதுமக்கள் யாருக்கும் இடையூறு ஏற்படாத வண்ணம் சென்னை புறநகரிலோ அல்லது இசிஆரில் தேர்தல் நடத்த வேண்டும் என நீதிபதி அறிவுறுத்தினார்.

காவல்துறை சார்பில், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாதவாறு ஈ.சி.ஆர் அல்லது ஓ.எம்.ஆர் பகுதிகளில் தேர்தல் நடத்த ஆட்சேபம் இல்லை எனவும், தேர்தல் பாதுகாப்பு ஏற்பாடு செய்யவும் காவல் துறை தயாராக உள்ளது என குறிப்பிட்டனர்.

ஆனால், நடிகர் சங்கம் தரப்பில், வெகு தொலைவில் தேர்தல் நடத்தினால் வாக்களிக்க பெரும்பாலானோர் வரமாட்டார்கள் என வாதிடப்பட்டது. அப்போது நீதிபதி ஒய்எம்சிஏ அல்லது கோடம்பாக்கம் மீனாட்சி கல்லூரி போன்ற இடங்களை தேர்வு செய்யுமாறு நடிகர் சங்கத்துக்கு அறிவுறுத்தினார்.

மேலும், எம்ஜிஆர் ஜானகி கல்லூரிக்குப் பதிலாக மாற்று இடத்தை தேர்வு செய்து புதன்கிழமை தெரிவிக்குமாறு நடிகர் சங்கத்திற்கு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை அன்றைய தினத்திற்கு தள்ளிவைத்தார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்