சொந்த சேமிப்பு, ஏலத்தில் கிடைத்த பணம் பிரதமரான பிறகு 6 ஆண்டுகளில் மோடி ரூ.103 கோடி நன்கொடை: பிரதமர் அலுவலகம் தகவல்

சொந்த சேமிப்பு, ஏலத்தில் கிடைத்த பணம் பிரதமரான பிறகு 6 ஆண்டுகளில் மோடி ரூ.103 கோடி நன்கொடை: பிரதமர் அலுவலகம் தகவல்

நாட்டின் பிரதமராக பதவியேற்ற பிறகு, கடந்த 6 ஆண்டுகளில் இதுவரை மொத்தம் ரூ.103 கோடியை மோடி நன்கொடையாக அளித்துள்ளார். கொரோனா தொற்று போன்ற பேரிடர் காலங்களில் ஏற்படும் நிதி பற்றாக்குறையை சமாளிக்க பிஎம் கேர்ஸ் என்ற திட்டத்தை பிரதமர் மோடி கடந்த மார்ச் 27ம் தேதி தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் கீழ் யார் வேண்டுமானாலும் நிதி உதவி அளிக்கலாம். ஆனால், இத்திட்டம் தொடங்கப்பட்ட முதல் 5 நாட்களில், அதாவது மார்ச் 31ம் தேதிக்குள் ரூ. 3,076 கோடி நன்கொடை கிடைத்திருப்பதாக தணிக்கை அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாக நேற்று முன்தினம் தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து, காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம் நன்கொடை அளித்தவர்கள் யார்?இதன் மூலம் பயனடைந்தவர்கள் யார்? என்ற விவரங்களை வெளியிடும்படி கேள்வி எழுப்பி இருந்தார்.

இந்நிலையில், பிஎம் கேர்ஸ் அறக்கட்டளைக்கு பிரதமர் மோடி தனது தனிப்பட்ட சேமிப்பில் இருந்து ரூ 2.25 லட்சம் வழங்கி இருப்பதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இதற்கு முன்பு, கடந்த 2019ல் கும்பமேளா சுகாதாரப் பணியாளர்கள் நலனுக்காக ரூ.21 லட்சம், தூய்மை கங்கை திட்டத்துக்கு தென்கொரியா வழங்கிய சியோல் அமைதி பரிசு மூலம் கிடைத்த ரூ.1.30 கோடி மற்றும் ஏலம் மூலம் கிடைத்த ரூ.3.40 கோடி, குஜராத் மாநில குழந்தைகளின் கல்வி செலவுக்காக ரூ.21 லட்சம் என பிரதமர் மோடி தனது சேமிப்பில் இருந்தும், தனக்கு கிடைத்த பரிசுப் பொருட்களை ஏலம் விட்டதன் மூலம் கிடைத்த பணத்தில் இருந்தும் இதுவரையில் ரூ.103 கோடிக்கும் அதிகமாக நன்கொடை அளித்துள்ளார்.

நாட்டில் ஒரே நாளில் 84,883 பேர் பாதிப்பு
இந்தியாவில் நேற்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதித்தோர், பலியானோர், குணமடைந்தோர் உள்ளிட்ட விவரங்கள் குறித்து மத்திய சுகாதார அமைச்-்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கை:
* நேற்று ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவு 83,883 பேர் பாதிக்கப்பட்டதால், மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 38,53,406 ஆக அதிகரித்துள்ளது.
* கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,043 பேர் பலியாகினர். இதனால், நாட்டில் கொரோனாவுக்கு பலியானோர் மொத்த எண்ணிக்கை 67,376 ஆக உயர்ந்துள்ளது.
* இதுவரை 29,70,492 பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளதால், குணமடைந்தோரின் சதவீதம் 77 ஆக உயர்ந்துள்ளது.
* தற்போது 8,15,538 சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பரிசோதனையில் உலகில் நம்பர் 1
* கொரோனா பரிசோதனையில் உலகளவில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. நேற்று ஒரே நாளில் (புதன் கிழமை) 11 லட்சத்து 72 ஆயிரத்து 179 பேருக்கு சோதனை செய்யப்பட்டது. இத்துடன் சேர்த்து நாட்டில் கொரோனா பரிசோதனை செய்து கொண்டவர்களின் எண்ணிக்கை 4 கோடியே 55 லட்சத்து 9 ஆயிரத்து 380 ஆக உயர்ந்துள்ளது.
* கடந்த ஜனவரி 30ம் தேதி நாளொன்றுக்கு 10 பேருக்கு சோதனை செய்து வந்த நிலையில், தற்போது நாளொன்றுக்கு 11.72 லட்சம் பேர் என்ற நிலையை இந்தியா எட்டியுள்ளது

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்