அதிமுக பிரமுகர் இல்ல மணவிழாவில் கலந்துகொண்ட அமைச்சர் கே.சி.வீரமணி எம்.ஜி.ஆர். திரைப்பட பாடல்களை பாடி அசத்தினார்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் அதிமுக நிர்வாகி ஒருவரது இல்ல திருமண நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட வணிகவரித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி மணமக்களை வாழ்த்திவிட்டு அங்கிருந்த கட்சியினருடன் பேசிக்கொண்டிருந்தார்.
அப்போது திருமண வீட்டில் கச்சேரி நடத்திக் கொண்டிருந்த ஆர்கெஸ்ட்ரா குழுவினர் எம்.ஜி.ஆர். திரைப்படத்தில் இடம்பெற்ற நாளை நாமதே, இந்த நாளும் நமதே என்ற பாடலை பாடிக்கொண்டிருந்தனர். இதைக்கேட்ட அமைச்சர் கே.சி.வீரமணி சற்றும் யோசிக்காமல் மேடையேறி சென்று மைக்கை பிடித்து பாடத் தொடங்கினார்.நாளை நமதே.. இந்த நாளும் நமதே… தாய்வழி வந்த தங்கங்கள் எல்லாம்… என அமைச்சர் ராகம் போட்டு பாடத் தொடங்கியதால் கீழிருந்த அதிமுகவினர் உற்சாகம் பொங்க கோரஸ் குரல் எழுப்பினர். அந்தப் பாடலை முழுமயாக பாடி முடித்துபின்னர் மேடையிறங்கிய அமைச்சர் கே.சி.வீரமணியை சூழ்ந்து கொண்டு ‘அண்ணா பாட்டு சூப்பர்ணா’, ‘அசத்திடீங்கண்ணா’ என ரத்தத்தின் ரத்தங்கள் ஐஸ் வைத்தனர்.
சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வருவதால் அரசியல்வாதிகள் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்த தவறுவதில்லை. அந்த வகையில் மக்கள் கூடும் இடங்களான திருமண விழாக்கள், விஷேஷ நிகழ்ச்சிகள் எந்த இடமாக இருந்தாலும் மக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே அமைச்சர் கே.சி.வீரமணி இதேபோல் பலமுறை கட்சி நிகழ்ச்சிகளிலும் தொண்டர்கள் மத்தியில் பாடல் பாடக்கூடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.