இண்டூர் அரசு பள்ளியில் பொங்கல் விழா..!

இண்டூர் அரசு பள்ளியில் பொங்கல் விழா..!

இண்டூர்:
தர்மபுரி மாவட்டம், இண்டூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் தொடர்ந்து 21 ஆண்டுகளாக ஆசிரியர்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் இணைந்து பொங்கல் விழா கொண்டாடி வருகின்றனர்.

பள்ளியில் பயின்ற மாணவர்கள் அனைவரும் பள்ளி படிப்பை முடித்து விட்டு வெளியே சென்றாலும் தனது பள்ளியில் நடைபெறும் பொங்கல் விழாவில் ஆண்டுதோறும் தவறாமல் கலந்து கொள்கின்றனர்.

அதே போன்று இந்த வருடமும் ஆசிரியர்கள் மற்றும் முன்னாள், இந்நாள் மாணவர்கள் கலந்து கொண்டு பள்ளியில் பொங்கல் வைத்து இறை வழிபாடு நடத்தினர்.

அதன் பின்னர் பள்ளி வளாகத்திலேயே உணவருந்தி மகிழ்ந்தனர். பின்னர் பழைய நினைவுகள் பற்றி மாணவர்கள், ஆசிரியர்களிடம் பகிர்ந்து கொண்டனர்.

இது பற்றி முன்னாள் மாணவன் முருகன் கூறியதாவது:
எங்களின் கணித ஆசிரியர் சொருபநாதன் ஐயா கடந்த 1999ம் ஆண்டு பொங்கல் விழாவை பள்ளியில் தொடங்கி வைத்தார்.

2007ம் ஆண்டு 12ம் வகுப்பு படித்து கொண்டிருந்தோம். அப்போது இருந்து முன்னாள் மாணவர் சங்கம் என்ற அமைப்பை ஏற்படுத்தி அதன் மூலம் ஒவ்வொரு ஆண்டும் இது போன்ற விழாவை நடத்தி வருகிறோம்.

தற்போது நான் தமிழக அரசு துறையில் பணியாற்றி வருகிறேன். அதே போன்று சக நண்பர்களும் அரசு துறை மற்றும் தனியார் துறைகளில் உள்ளனர்.

அனைவரும் பொங்கல் நாளில் பள்ளியில் ஒன்று கூடுவோம். பொங்கல் வைத்து இறை வழிபாடு செய்துவிட்டு ஒன்றாக அமர்ந்து உணவருந்துவோம்.

பின்னர் பழைய வகுப்பறையில் அமர்ந்து எங்களின் மலரும் நினைவுகளை பகிர்ந்து கொள்வோம்.

நாம் அடுத்த கட்டமாக நம்மால் சமூகத்திற்கும் பள்ளிக்கும் என்ன செய்ய வேண்டும் என்பதை ஆலோசித்து செய்வோம்.

அன்று ஆசிரியர்கள் அடித்து திருத்தி சொல்லி கொடுத்ததால் தற்போது அனைவரும் நல்ல நிலையில் உள்ளோம் என்பதை யாரும் மறுக்க முடியாது.

நாங்கள் அனைவரும் நல்ல நிலையில் இருப்பதை கண்டும் ஆசிரியர்கள் அளவற்ற மகிழ்ச்சி அடைந்தனர்.

ஆசிரியர்களால் நாங்கள் உயர்ந்தோம் என்று எண்ணி மகிழ்ச்சி அடைந்தோம். மேலும், இன்றைய மாணவர்களுக்கு உதாரணமாக இருக்கின்றனர் என்று ஆசிரியர்கள் எங்களை அழைத்து ஊக்கப்படுத்தினர்.

பின்னர் புதியதாக பிரிக்கப்பட்ட மாணவிகளுக்கான பள்ளியில் புதிய கட்டிட வகுப்புகளை சுற்றி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இணைந்து மரக்கன்றுகளை நட்டு வைத்தோம். இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்