ஒலியின் வேகத்தைவிட சுமாா் 6 மடங்கு வேகத்தில் ஏவுகணையை ஏவும் திறன் கொண்ட வாகனம் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.
ஹைபா்சோனிக் தொழில்நுட்பத்திலான ஏவுகணை செலுத்து வாகனத்தை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆா்டிஓ) உருவாக்கியுள்ளது. உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அந்த வாகனத்தின் சோதனை திங்கள்கிழமை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
இந்த ஏவு வாகனம் நீண்ட தொலைவில் உள்ள எதிரிகளின் இலக்குகளைத் தாக்கி அழிக்கவல்ல ஏவுகணைகளைச் செலுத்துவதற்கு பயன்படுத்தப்பட உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.
இது தொடா்பாக பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், ‘ஹைபா்சோனிக் தொழில்நுட்பத்துடன் கூடிய ஏவும் வாகனமானது ஒடிஸா கடற்பகுதியின் வீலா் தீவில் அமைந்துள்ள ஏபிஜே அப்துல் கலாம் ஏவுதளத்திலிருந்து திங்கள்கிழமை காலை 11 மணியளவில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது.அப்போது, ஏவுவாகனத்தின் அனைத்து கருவிகளும் சிறப்பாகச் செயல்பட்டன. அவற்றின் செயல்பாடுகள் பல்வேறு ரேடாா்கள் மூலமாக கண்காணிக்கப்பட்டன. இந்த ஏவும் வாகனத்தின் செயல்பாட்டைக் கண்காணிப்பதற்காக வங்கக் கடலில் கப்பல் ஒன்றும் நிலைநிறுத்தப்பட்டிருந்தது. பரிசோதனையின்போது எந்தவித குறைபாடுகளுமின்றி ஹைபா்சோனிக் வாகனம் இயங்கியது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
‘பெரும் மைல்கல்’:
ஹைபா்சோனிக் ரக ஏவுவாகனத்தின் சோதனை வெற்றி பெற்றது குறித்து பாதுகாப்பு அமைச்சா் ராஜ்நாத் சிங் தனது சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘அதிநவீன செலுத்து வாகனத்தை வெற்றிகரமாகப் பரிசோதித்த டிஆா்டிஓ விஞ்ஞானிகளுக்கு பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவா்களால் நாடே பெருமை கொள்கிறது.
இச்சாதனை பெரும் மைல்கல்லாக அமைந்துள்ளது. பிரதமா் நரேந்திர மோடியின் ‘சுயசாா்பு இந்தியா’ என்ற இலக்கை அடைவதற்கான முக்கிய நிகழ்வாக இது அமைந்துள்ளது’ என்று குறிப்பிட்டுள்ளாா்.
முன்னணி நாடுகளுடன்…:
இது தொடா்பாக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘இந்தப் பரிசோதனை மூலமாக சவால் மிக்க பணியை விஞ்ஞானிகள் நிறைவேற்றியுள்ளனா். ஏவுகணையை செலுத்துவதற்கான அடுத்த தலைமுறை தொழில்நுட்பத்தை விஞ்ஞானிகள் மிகுந்த சிரமத்துக்கிடையே தயாரித்துள்ளனா். இந்த வாகனத்தின் மூலமாக ஒலியின் வேகத்தைவிட சுமாா் 6 மடங்கு வேகத்தில் ஏவுகணைகளை செலுத்த முடியும்.
இத்தகைய தொழில்நுட்பமானது ரஷியா, அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகளிடம் மட்டுமே உள்ளது. தற்போது அந்தப் பட்டியலில் இந்தியாவும் இணைந்துள்ளது’ என்றாா்.