மர்மக் கொலை; 3 பேர் கைது

மர்மக் கொலை; 3 பேர் கைது

ஒசூர்:

ஓசூர் அருகே, கடந்தவாரம் அடையாளம் தெரியாத நபர் கொலை செய்யப்பட்ட வழக்கில், 3 பேரை பாகலூர் போலீசார் கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே தமிழக எல்லையான கக்கனூரில் கடந்த வாரம் சரமாரியாக வெட்டப்பட்ட அடையாளம் தெரியாத ஆண் சடலத்தை பாகலூர் போலீசார் மீட்டு தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் கர்நாடக மாநிலம் மைசூரை சேர்ந்த கவுதமன் (25) என்பதும், இவர் மலவள்ளி என்னுமிடத்தில் தனியார் மருத்துவமனைக்கு சொந்தமான ரத்த பரிசோதனை ஆய்வகத்தில் பணியாற்றி வந்ததும் தெரியவந்துள்ளது.

கவுதமன் தனது நண்பரான அருண் (24) என்பவரிடம் ரூ.50,000 வட்டிக்கு கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. இந்த பணத்தை நீண்ட நாட்களாகியும் கவுதமன் பணம் செலுத்தாததால், வட்டியுடன் சேர்த்து ரூ.1.5 லட்சத்தை அருண் கேட்டு தொந்தரவு செய்து வந்துள்ளார்.

கவுதமனிடமிருந்து இனி பணம் பெறமுடியாது என்பதை அறிந்த அருண், சக நண்பர்கள் 4 பேருடன் கவுதமனிடம் சென்றுள்ளார். அப்போது கவுதமனிடம், ஓசூர் அருகே ஒருவரிடம் பணம் பெற்று வரலாம் என்றும், துணைக்கு வந்தால் போதும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனை நம்பி, எவ்வித சந்தேகமுமின்றி கவுதமன் காரில் அமர்ந்துள்ளார். தமிழக எல்லையான கக்கனூர் என்னுமிடத்தில் கார் பழுதானதாக அனைவரும் இறங்கிய நிலையில், கவுதமனின் பின் பக்கத்தில் இரும்பு கம்பியால் அருண் தாக்கியுள்ளார்.

நிலைதடுமாறி கீழே விழுந்த கவுதமனை மற்ற மூவரும் அடையாளம் தெரியாத வகையில் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பித்து சென்றுள்ளனர்.

இதுகுறித்து தகவலறிந்த பகாலூர் போலீசார், கவுதமனின் உடலை மீட்டு தீவிர விசாரணையில் ஈடுபட்டுவந்த நிலையில், கவுதமன் கொலைக்கு காரணமான அருண் உட்பட 3 பேரை கர்நாடக மாநிலம் மைசூருவில் பாகலூர் போலீசார் அதிரடியாக கைது செய்தனர். தப்பியோடிய மற்றொருவரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்