இந்தியாவில் ரூ.75,000 கோடி முதலீடு செய்யும் கூகுள்… சுந்தர் பிச்சை அறிவிப்பு!

இந்தியாவில் ரூ.75,000 கோடி முதலீடு செய்யும் கூகுள்… சுந்தர் பிச்சை அறிவிப்பு!

அடுத்த 5 முதல் 7 ஆண்டுகளில் இந்தியாவில் 10 பில்லியன் டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் ரூ. 75,000 கோடி) முதலீடு செய்யவுள்ளதாக கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது.

2020-ம் ஆண்டுக்கான ‘கூகுள் ஃபார் இந்தியா’ நிகழ்ச்சியில் இன்று பேசிய அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை இந்த அறிவிப்பை வெளியிட்டார். இந்தியாவின் எதிர்காலம் மற்றும் அதன் டிஜிட்டல் பொருளாதாரம் குறித்த தங்கள் நம்பிக்கையின் வெளிப்பாடாக இந்த முதலீடுகள் செய்யப்படுவதாக சுந்தர் பிச்சை கூறியுள்ளார். இந்தியாவின் டிஜிட்டல் மாற்றத்தை ஊக்குவிக்கும் வகையில் இந்த முதலீடுகள் செய்யப்படுகின்றன. அதே போல் சுகாதாரம், கல்வி, வேளாண்மை உள்ளிட்ட முக்கிய துறைகளில் தொழில்நுட்ப வளர்ச்சியை மேம்படுத்துதல் ஆகிய காரணங்களை அடிப்படையாக கொண்டும் முதலீடு செய்யப்படுகிறது.இதன்மூலம் இந்தியாவின் தேவைகளுக்கு ஏற்றாற்போல் தயாரிப்புகள் மற்றும் சேவைகளையும் கூகுள் வழங்கவுள்ளது.

உலக மக்கள் தொகையில் 2வது இடத்தை பிடித்துள்ள இந்தியாவில் 500 மில்லியனுக்கும் அதிகமான பொதுமக்கள் இணையத்தை பயன்படுத்துகின்றனர். அதனால் இந்தியர்களுக்கு இணைய சேவையை பயனுள்ளதாக்கும் நடவடிக்கைகளில் கூகுள் ஈடுபடும் என சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார். இந்தியாவின் அனைத்து மொழிகளிலும் குரல் உள்ளீடு உள்ளிட்ட அம்சங்களை மேம்படுத்த திட்டமிட்டுள்ளனர்.

டிஜிட்டல் வர்த்தகத்தை ஊக்குவிக்கும் வகையிலான முதலீடுகள் கடந்த சில மாதங்களாக அதிகரித்துள்ளன. அந்த வகையில் பேஸ்புக் நிறுவனம், இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோவில் முதலீடு செய்திருந்தது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் இந்தியா வந்த ஜெஃப் பெசோஸ், அமேசான் நிறுவனம், இந்தியாவில் கூடுதலாக 1 பில்லியன் டாலர் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்