சிவசேனா உடனான மோதல் போக்குக்கு இடையே, மும்பையில் உள்ள நடிகை கங்கனா ரணாவத்தின் அலுவலகம், அனுமதியின்றிக் கட்டப்பட்டதாகக் கூறி மும்பை மாநகராட்சி இடித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங்கின் மரணத்துக்குப் பிறகு மும்பையை பாதுகாப்பற்ற நகரமாக உணா்வதாக நடிகை கங்கனா ரணாவத் கருத்து தெரிவித்திருந்தார். அவரது கருத்துக்கு ஆளும் சிவசேனா கட்சியின் தலைவா்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். கங்கனாவுக்கும், சிவசேனா கட்சியினருக்கும் இடையில் தொடர்ந்து மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்நிலையில், மும்பையின் புறநகர் பகுதியான பாந்த்ராவில் உள்ள பாலிஹில்லில் கங்கனா ரணாவத்தின் அலுவலகம் உள்ளது.இங்கு மாநகராட்சியின் ஒப்புதலை பெறாமல், கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கழிப்பறை இருந்த இடத்தில் அலுவலகம் கட்டப்பட்டு வருகிறது. படிக்கட்டு இருந்த இடத்தல் கழிப்பறைகள் கட்டப்பட்டு வருகின்றன.இவ்வாறு கட்டடத்தில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. இந்த மாற்றங்களுக்காக, மாநகராட்சி நிர்வாகத்திடம் ஒப்புதல் பெறப்பட்டதா என பதிலளிக்குமாறு, கங்கனா ரணாவத்திற்கு உத்தரவிடப்பட்டது.
அலுவலகத்தில் யாரும் இல்லாததால், அங்கு நோட்டீசை ஒட்டி சென்றனர். இதனை எதிர்த்து கங்கனா, மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்நிலையில், அந்த அலுவலக கட்டடத்தை மாநகராட்சி அதிகாரிகள், அனுமதியின்றி கட்டியதாக கூறி இடித்து தள்ளினர். இதனை டுவிட்டரில் படம்பிடித்து வெளியிட்டுள்ள கங்கனா, மும்பை நகரை பாகிஸ்தானுடன் ஒப்பிட்டுள்ளார்.