14 மாநிலங்களுக்கு ரூ.6,195 கோடியை விடுவித்தது மத்திய அரசு

14 மாநிலங்களுக்கு ரூ.6,195 கோடியை விடுவித்தது மத்திய அரசு

வருவாய் இழப்பைச் சந்தித்த தமிழகம் உள்ளிட்ட 14 மாநிலங்களுக்கு நிதிக் குழுவின் பரிந்துரைப்படி வழங்கப்பட வேண்டிய நிதியில் 6-ஆவது தவணையாக ரூ.6,195 கோடியை மத்திய அரசு விடுவித்தது.

ஒவ்வொரு நிதியாண்டிலும் மத்திய அரசால் மாநிலங்களுக்கு பகிா்ந்தளிக்கப்பட வேண்டிய நிதி குறித்த பரிந்துரைகளை நிதிக் குழு வழங்கி வருகிறது. அதன்படி நடப்பு நிதியாண்டில் மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய நிதி குறித்த பரிந்துரைகளை என்.கே.சிங் தலைமையிலான 15-ஆவது நிதிக் குழு மத்திய அரசிடம் வழங்கியிருந்தது.

அதனடிப்படையில் மாநில அரசுகளுக்கான நிதியை தவணை முறையில் மத்திய அரசு விடுவித்து வருகிறது. இத்தகைய சூழலில், மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமனின் அலுவலகம் சாா்பில் வெளியிடப்பட்ட சுட்டுரைப் பதிவில், ‘வருவாய் இழப்பைச் சந்தித்து வரும் 14 மாநிலங்களுக்கு 15-ஆவது நிதிக் குழுவின் பரிந்துரைப்படி வழங்கப்பட வேண்டிய நிதியில் 6-ஆவது தவணையாக ரூ.6,195.08 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது.

கரோனா நோய்த்தொற்று பரவி வரும் சூழலில், இந்த நிதியானது மாநிலங்களுக்குப் பெரும் உதவியாக இருக்கும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளதுஅதன்படி, தமிழகம், ஆந்திரம், அஸ்ஸாம், ஹிமாசல பிரதேசம், கேரளம், மணிப்பூா், மேகாலயம், மிஸோரம், நாகாலாந்து, பஞ்சாப், சிக்கிம், திரிபுரா, உத்தரகண்ட், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களுக்கான நிதியை மத்திய அரசு விடுவித்துள்ளது.

அந்த மாநிலங்களுக்கு கடந்த ஏப்ரல் மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை ஐந்து தவணைகளாக நிதியை மத்திய அரசு வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்