ரூ.2.35 லட்சம் கோடி பாக்கியை அடைக்க 2 வழிகள் கடன் வேணுமா வாங்கிக்கங்க 5 வருஷம் கழிச்சு கொடுங்க… ஜிஎஸ்டி மாநாட்டில் சலுகை: மாநிலங்கள் ஏமாற்றம்

ரூ.2.35 லட்சம் கோடி பாக்கியை அடைக்க 2 வழிகள் கடன் வேணுமா வாங்கிக்கங்க 5 வருஷம் கழிச்சு கொடுங்க… ஜிஎஸ்டி மாநாட்டில் சலுகை: மாநிலங்கள் ஏமாற்றம்

மாநிலங்கள் ஜிஎஸ்டி அமல்படுத்தியதால் ஏற்பட்ட வருவாய் இழப்பை ஈடுகட்ட கடன் வாங்குவதற்கு 2 வழிமுறைகளை மத்திய அரசு கூறியுள்ளது. ஜிஎஸ்டி கடந்த 2017ம் ஆண்டு ஜூலையில் அமல்படுத்தப்பட்டது. இதனால், மாநிலங்களுக்கு நேரடியாக கிடைக்கும் வரி வருவாய் குறைந்தது. எனவே, 2015-16 நிதியாண்டை அடிப்படையாக வைத்து, மாநிலங்களுக்கு ஏற்படும் வரி வருவாய் இழப்பை ஈடுகட்ட 5 ஆண்டுகளுக்கு இழப்பீடு வழங்க மத்திய அரசு உறுதி அளித்திருந்தது. இதன்படி கடந்த 2019-20 நிதியாண்டில் ரூ.1.65 லட்சம் கோடி, 2018-19ல் ரூ.69,275 கோடி, 2017-18ல் ரூ.41,146 கோடியை மாநிலங்களுக்கு மத்திய அரசு இழப்பீடாக வழங்கியுள்ளது.

ஆனால், எதிர்பார்த்த அளவு ஜிஎஸ்டி வருவாய் இல்லாததால் இழப்பீடு வழங்குவதில் தாமதம் ஏற்பட்டது.கொரோனா பரவலுக்கு பிறகு பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் வருவாய் மேலும் குறைந்து விட்டதால், மாநிலங்களுக்கும் கடும் நிதிப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில், மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி இழப்பீடு விவகாரம் தொடர்பாக, அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபாலிடம் மத்திய அரசு கடந்த மார்ச் மாதம் ஆலோசனை கேட்டிருந்தது. இதற்கு, மாநில அரசுகளுக்கு ஜிஎஸ்டி வருவாய் குறைந்தால், மத்திய அரசு கருவூலத்தில் இருந்து இழப்பீடு வழங்க வேண்டிய கட்டாயம் கிடையாது. என அவர் கூறினார்.

மாநிலங்களுக்கு மத்திய அரசு ஜிஎஸ்டி இழப்பீடாக நடப்பு ஆண்டில் ரூ.3 லட்சம் கோடி வரை வழங்க வேண்டி வரும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த விவகாரம் குறித்து முடிவு செய்ய, 41வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடந்தது. காணொலி முறையில் மாநில நிதியமைச்சர்களுடன் 5 மணி நேரம் ஆலோசனை நடந்தது. பின்னர், நிர்மலா சீதாராமன் கூறியதாவது: மத்திய அரசு கடந்த நிதியாண்டில் மாநிலங்களுக்கு ₹1.65 லட்சம் கோடியை இழப்பீடாக வழங்கியுள்ளது. நடப்பு நிதியாண்டில் ரூ.2.35 லட்சம் கோடி இழப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் ஜிஎஸ்டி அமல்படுத்தியதால் ரூ.97,000 கோடி மட்டுமே இழப்பு ஏற்படும். எஞ்சிய தொகை கொரோனா பரவலால் ஏற்பட்ட இழப்பு. இந்த இழப்பீட்டை மாநிலங்கள் ஈடுகட்ட, மாநிலங்களுக்கு 2 வழிமுறைகள் அளிக்கப்படுகிறது.

1 ஜிஎஸ்டி அமல்படுத்தியதால் ஏற்பட்ட இழப்பான ரூ.97,000 கோடியை நியாயமான வட்டியில் மாநிலங்கள் கடனாக பெற்றுக்கொள்ளலாம். இதை செஸ் வரியில் வசூலித்து 5 ஆண்டுக்கு பிறகு திரும்ப செலுத்தலாம். 2 ஒட்டு மொத்த இழப்பான ரூ.2.35 லட்சம் கோடியையும் ஈடுகட்ட சிறப்பு சாளர முறையில் மாநிலங்கள் கடனாக வாங்கிக் கொள்ளலாம். – இந்த 2 வழிமுறைகள் பற்றிய கருத்துக்களையும் தங்கள் முடிவையும் மாநிலங்கள் 7 நாட்களுக்குள் நிதியமைச்சகத்திடம் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இந்த கூட்டத்தில் தங்களுக்கான நிலுவையை வழங்குவதற்கான வழி பிறக்கும் என்று மாநிலங்கள் எதிர்பார்த்தன. ஆனால், நிர்மலாவின் இந்த அறிவிப்பால், அவை ஏமாற்றம் அடைந்தன.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்