ஒற்றை யானையால் அச்சம்

ஒற்றை யானையால் அச்சம்

ஒசூர்:

ஒசூர் அருகே ஒற்றை யானை வனப்பகுதிக்குள் செல்லாமல் பசுமாட்டை தாக்கியதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் வனக்கோட்டம் சானமாவு வனபகுதியினுள் 3 காட்டுயானைகள் இருந்து வரும் நிலையில், இரவு நேரங்களில் உணவை தேடி கிராம பகுதிகளுக்கு வரும் யானைகள் மீண்டும் விடியற்காலை வனப்பகுதிக்கு சென்றுவிடுவது வழக்கம்.

ஆனால், சில தினங்களாக சானமாவு வனப்பகுதியிலிருந்து வெளிவரும் ஒற்றையானை பகல்நேரங்களிலும் சுற்றிவருவதால் சானமாவு வனப்பகுதி ஒட்டிய கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

நேற்று இரவு சானமாவு வனப்பகுதியிலிருந்து பேரண்டப்பள்ளி வழியாக சென்ற ஒற்றை காட்டுயானை விளைநிலங்களை சேதப்படுத்தி காலை நீண்டநேரமாக புக்கசாகரம் என்னும் கிராமத்தில் யானை தொடர்ந்து இருந்து வந்ததை பொதுமக்கள் ஆர்வமுடன் காண குவிந்தனர்.

ஒற்றையானை வனப்பகுதிக்கு செல்லாமல் பசுமாட்டினை தாக்கி காயப்படுத்தியதை பார்த்த கிராமத்தினர் அதிர்ச்சி அடைந்து வனத்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் யானையை கண்காணித்து விரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ஒற்றை யானை மிகவும் ஆபத்தானதாக இருக்கலாம் என்பதால் சானமாவு வனப்பகுதி ஒட்டிய சுண்டட்டி, புக்கசாகரம், பேரண்டப்பட்டி, குக்கலப்பள்ளி, ஆழியாளம், இராமாபுரம் உள்ளிட்ட கிராம மக்கள் பாதுகாப்புடன் இருக்கவும் வனப்பகுதிக்குள் ஆடு மாடு மேய்ச்சலுக்கும் விளைநிலங்களில் இரவு காவலுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தி வருகின்றனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்