மாநிலங்களவை எம்பி பதவிக்கு வேட்பாளர்கள் அறிவித்ததில் அதிமுக மூத்த தலைவர்கள் கடும் அதிருப்தி

மாநிலங்களவை எம்பி பதவிக்கு வேட்பாளர்கள் அறிவித்ததில் அதிமுக மூத்த தலைவர்கள் கடும் அதிருப்தி

ஒரே மாவட்டத்தை சேர்ந்த 2 பேருக்கு பதவி
தேர்தலில் தோற்றவர்களுக்கு மீண்டும் சீட்

சென்னை: மாநிலங்களவை எம்பி பதவிக்கு அதிமுக வேட்பாளர்கள் 3 பேரின் பெயரை அதிமுக தலைமை நேற்று முன்தினம் அறிவித்தது. ஒரே மாவட்டத்தை சேர்ந்த தம்பிதுரை, கே.பி.முனுசாமி ஆகியோருக்கு பதவி வழங்கியதால் அதிமுக மூத்த தலைவர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு எம்பியாக தேர்வு செய்யப்பட்ட திருச்சி சிவா, டி.கே.ரங்கராஜன், சசிகலா புஷ்பா, விஜிலா சத்யானந்த், செல்வராஜ், முத்துக்கருப்பன் ஆகிய 6 பேரின் பதவிக்காலம் வருகிற ஏப்ரல் 2ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து, 6 மாநிலங்களவை எம்பிக்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் வருகிற 26ம் தேதி நடைபெறுகிறது.

இந்த தேர்தலில் அதிமுக, திமுக சார்பில் தலா 3 பேரை தேர்வு செய்யலாம் என்ற சூழ்நிலை உள்ளது. இதில் திமுக தனது வேட்பாளர்கள் 3 பேரை கடந்த வாரமே அறிவித்து விட்டதால், நேற்று முன்தினம் திருச்சி சிவா, அந்தியூர் செல்வராஜ், என்.ஆர்.இளங்கோ ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்து விட்டனர்.

இந்த பரபரப்பான சூழ்நிலையில் நீண்ட இழுபறிக்கு பின்னர் நேற்று முன்தினம் அதிமுக சார்பில் மாநிலங்களவை எம்பி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்களை கட்சி தலைமை அறிவித்தது. அதன்படி, அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, மக்களவை முன்னாள் சபாநாயகர் மு.தம்பிதுரை ஆகிய 2 பேர் பெயர்களும், அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள தமாகா தலைவர் ஜி.கே.வாசனுக்கு ஒரு சீட்டும் ஒதுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. தம்பிதுரை, கே.பி.முனுசாமி ஆகிய 2 பேருக்கு மாநிலங்களவை எம்பி சீட் வழங்கியதால் அதிமுக மூத்த நிர்வாகிகள் கடும் அதிருப்தியில் உள்ளனர். இதுகுறித்து அதிமுக மூத்த நிர்வாகியும், அதிமுகவில் மாநிலங்களவை எம்பி சீட் கேட்டு ஏமாற்றம் அடைந்த முன்னணி தலைவர் ஒருவர் கூறியதாவது:
அதிமுக தலைமை அறிவித்துள்ள கே.பி.முனுசாமி, தம்பிதுரை ஆகிய 2 பேரும் 2019ம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தவர்கள். அவர்களுக்கு தற்போது மீண்டும் மாநிலங்களவை எம்பி சீட் வழங்கப்பட்டுள்ளது.

எந்த வகையில் நியாயம்? அதுவும், கே.பி.முனுசமி, தம்பிதுரை ஆகிய 2 பேரும் ஒரே மாவட்டத்தை அதாவது கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள். ஒரே மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு எம்பி பதவி வழங்கி இருப்பது தவறான முன் உதாரணம். ஜெயலலிதா, இருந்திருந்தால் இந்த தவறை செய்திருக்க மாட்டார். கே.பி.முனுசாமி கடந்த மக்களவை தேர்தலில் கிருஷ்ணகிரி மக்களவை தொகுதியில் நின்று தோல்வி அடைந்தார். தம்பிதுரையும் கடந்த 2 மக்களவை தேர்தலுக்கு முன் கிருஷ்ணகிரியில் நின்று தோல்வி அடைந்தார். அந்த மாவட்டத்தில் உள்ள தொகுதியான பர்கூரில் வெற்றி பெற்று எம்எல்ஏவாக இருந்தார். பின்னர் கரூரில் நின்று எம்பியாக வெற்றி பெற்றார். அதிமுகவில் குறிப்பிட்ட ஒரு சிலருக்கே பதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் இருந்தே இவர்கள் பதவிகளை அனுபவித்து வருகிறார்கள். ஆனால், மேடைகளில் தலைவர்கள் பேசும்போது, சாதாரண தொண்டனும் அதிமுகவில் உயர்ந்த பதவிக்கு வரலாம் என்கிறார்கள். இது ஏட்டளவில்தான் உள்ளது. உண்மையில் நடைமுறையில் இல்லை.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்