தொட்டிலில் பிணம்; ஐகோர்ட் அதிரடி

தொட்டிலில் பிணம்; ஐகோர்ட் அதிரடி

சென்னை:

வேலூர் அருகே ஜாதி காரணத்தால் சடலத்துக்கு அனுமதி மறுத்ததால், 20 அடி உயர  பாலத்தில் தொட்டில் கட்டி சடலத்தை இறக்கிய சம்பவத்தில் சென்னை உயர்நீதிமன்றம் தாமாகவே முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது.

வேலூர் மாவட்டத்தின் திருப்பத்தூர் அருகே உள்ள நாற்றம்பள்ளி அடுத்த அலசந்தாபுரம் கிராமத்தை சேர்ந்த குப்பன் சாலை விபத்து ஒன்றில் பலியானார். இவரின் உடலை அலசந்தாபுரம் ஆற்றுப் பகுதியில் அடக்கம் செய்ய தூக்கிச் சென்றனர்.

அப்போது ஜாதியை காரணம் காட்டி குப்பனின் சடலத்தை தனியார் நிலங்களின் வழியே எடுத்துச்செல்ல எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. சடலத்தை எடுத்துச்செல்ல வேறு வழியில்லாமல் உறவினர்கள், 20 அடி உயர மேம்பாலத்திலிருந்து தொட்டில் கட்டி சடலத்தை இறக்கி, சுடுகாட்டுக்கு சென்றனர்.

ஆதி திராவிடர் சமுதாயத்தை சேர்ந்தவரின் உடலை மேம்பாலத்திலிருந்து தொட்டில் கட்டி இறக்கி அடக்கம் செய்த சம்பவம் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதனைத்தொடர்ந்து, இடுகாட்டுக்கு பாதை இல்லாமல் தவித்த ஆதிதிராவிடர் மக்களுக்காக 50 சென்ட் நிலத்தை வேலூர் மாவட்ட கலெக்டர் ஒதுக்கீடு உத்தரவிட்டார்.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக ஊடகங்களில் வெளியான செய்தியை மத்திய அரசு வழக்கறிஞர் கவனத்துக்கு கொண்டுவந்தன் அடிப்படையில், சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக ஆகஸ்ட் 26 ம் தேதி வேலூர் கலெக்டர் அறிக்கை அளிக்க நீதிபதி மணிக்குமார் தலைமையிலான அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்