அதிமுக ஆட்சியின் அவலங்கள் திமுக காங்கிரஸ் கூட்டணி வெற்றிக்கு பலமாக அமையும் : பாராளுமன்ற உறுப்பினர் செல்லகுமார் பேட்டி

அதிமுக ஆட்சியின் அவலங்கள் திமுக காங்கிரஸ் கூட்டணி வெற்றிக்கு பலமாக அமையும் : பாராளுமன்ற உறுப்பினர் செல்லகுமார் பேட்டி

*அதிமுக ஆட்சியின் அவலங்கள் திமுக காங்கிரஸ் கூட்டணி வெற்றிக்கு பலமாக அமையும் : பாராளுமன்ற உறுப்பினர் செல்லகுமார் பேட்டி*

ஒசூர் இராமநாயக்கன் ஏரியில் நடைபெற்று வரும் பணிகளை பார்வையிட்ட கிருஷ்ணகிரி பாராளுமன்ற உறுப்பினர் செல்லகுமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர்,

கொரோனா நோய் குறித்து ஆலோசனை நடத்த முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு கடந்த மாதம் வருகை தந்தார். அப்போது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 3 அதிகாரிகளுக்கு நோய் தொற்று இருந்தது. அதனைக்கூட பெரிது படுத்தாமல் முதலமைச்சர் அவர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் மக்கள் பிரதிநிதிகளை புறக்கணித்துவிட்டு ரகசிய ஆலோசனை கூட்டத்தை நடத்தி சென்றார்.

அந்த கூட்டத்தின் உண்மை நிலை என்ன என்பது இரண்டு நாள்களுக்கு பின்பு தெரிந்தது. இந்த மாவட்டத்தின் பல மலைகள் ஏலமிடப்பட்டது. அதுகுறித்து எந்த பத்திரிகைகளுக்கும் சொல்லவில்லை, அதேபோல கிருஷ்ணகிரி அணையில் ஷட்டர் போடுவதில் ஒப்பந்தம் போட்டு கொள்ளை, தூர்வாறுகிறோம் எனக்கூறி அதில் மணல் கொள்ளை, இந்த கொள்ளைகளுக்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளது. மணல் கொள்ளையில் அடிக்கப்பட்ட பணம் முழுமையாக வந்து சேர்கிறதா என கணக்கு பார்க்கவே அவர் வந்து சென்றார் என அவர் குற்றம் சாட்டினார்.

கொரோனா குறித்து ஆய்வு நடத்த முதலமைச்சர் வந்திருந்தால் கிருஷ்ணகிரி மாவட்டத்தின் கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்ட பீலா ராஜேஸ் ஏன் இந்த ஆலோசனை கூட்டத்திற்கு அழைக்கப்படவில்லை, அதுபோல மாவட்டத்திலுள்ள சட்டமன்ற உறுப்பினர்களையும் நாடாளுமன்ற உறுப்பினரையும் அழைத்து கொரோனா குறித்தும் மாவட்ட வளர்ச்சி குறித்தும் கருத்துக்கள் கேட்டிருக்கலாம் ஆனால் அப்படி ஏதும் நடக்கவில்லை என அவர் குற்றம் சாட்டினார்.

மேலும் பேசிய அவா, தமிழகத்தில் நடைபெற்று வரும் அதிமுக ஆட்சியின் அவலங்கள், வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக காங்கிரஸ் கூட்டணி வெற்றிக்கு பலமாக அமையும் என்றார். கொரோனா நோய் பரவுவதற்கு அடித்தளமிட்டதே மத்தியில் ஆளும் அரசும், மாநில அரசுமே ஆகும், ராகுல்காந்தி பிப்ரவரி மாதம் 2ஆம் தேதியே கொரோனா குறித்து எச்சரிக்கை விடுத்தார். அப்போதே தடுக்க சொன்னார். இல்லையென்றால் இந்தியா மிகப்பெரிய விளைவுகளை சந்திக்கும் என்றார். ஆனால் அப்பொழுது அவரை ஏளனம் செய்தார்கள். அவர் கூறியது நடந்து விட்டது.

அமெரிக்க அதிபரை அழைத்து வந்து விழா எடுக்க வேண்டும் மோடிக்கு புகழாரம் சூட்ட வேண்டும் என்ற ஒரு காரணத்திற்காக இந்தியாவில் இன்றுவரை 50 ஆயிரம் பேரை கொரேனாவில் பலி கொடுத்திருக்கிறோம், ஒரு தனி மனிதனின் விளம்பரத்திற்காக 30 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். நாட்டின் பொருளாதாரம் இதுவரை இல்லாத அளவிற்கு மிகப்பெரிய வீழ்ச்சியை சந்தித்துள்ளது. கோடிக்கணக்கானோர் வாழ்வாதாரத்தை இழந்து தற்கொலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் என்று குற்றம் சாட்டினார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்