சீனாவிற்கு செம ஆப்பை செதுக்கிய இந்தியா

சீனாவிற்கு செம ஆப்பை செதுக்கிய இந்தியா

இந்தியா – சீனா இடையேயான எல்லை விவகாரத்தின் விளைவாக, சீன பொருட்களின் ஏற்றுமதிக்கு தடை, சீன பொருட்கள் புறக்கணிப்பு ஆகிய குரல்கள் இந்தியாவில் வலுத்துள்ளன.

சீனாவிலிருந்து 70 பில்லியன் அமெரிக்கன் டாலர் மதிப்பிற்கு இறக்குமதி செய்யும் இந்தியா, வெறும் 16 பில்லியன் அமெரிக்கன் டாலர் மதிப்பிற்கு மட்டுமே ஏற்றுமதி செய்கிறது. சீனாவுடன் தான் இந்தியா மிகமோசமான வர்த்தக பற்றாக்குறையை கொண்டிருக்கிறது.

வர்த்தக பற்றாக்குறை என்பது, ஒரு குறிப்பிட்ட நாட்டிலிருந்து இறக்குமதி செய்யும் மதிப்பைவிட ஏற்றுமதி செய்யும் மதிப்பு எந்தளவிற்கு குறைவாக இருக்கிறது என்பதுதான். அப்படி பார்த்தால், இந்தியாவின் வர்த்தக பற்றாக்குறை, சீனாவுடன் தான் அதிகமாகவுள்ளது.சீன ராணுவம் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் நடத்திய தாக்குதல், இந்தியா – சீனா உறவில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. சீன பொருட்களை இந்திய மக்கள் தாங்களாகவே முன்வந்து புறக்கணிக்க தொடங்கியுள்ளனர். சீன மொபைல் அப்ளிகேஷன்களையும் ஏராளமான இந்தியர்கள் மொபைலிலிருந்து நீக்கிவருகின்றனர்.

சீனாவுடனான ராணுவ ரீதியான மற்றும் வர்த்தக ரீதியான அணுகுமுறையை முழுவதுமாக மாற்றியுள்ளது இந்திய அரசாங்கம். இன்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், முப்படை ராணுவ உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பின்னர், இந்திய ராணுவ வீரர்களுக்கு, சீனா விவகாரத்தில் முழு அதிகாரம் அளிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சீன ராணுவம் தாக்குதல் நடத்தினால், இந்திய ராணுவம் பதிலடி கொடுப்பதற்கு முழு சுதந்திரமும், களச்சூழலின் அடிப்படையில், சுயமாக முடிவெடுக்கவும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

அதேபோல வர்த்தக ரீதியிலும் இந்தியா கண்டிப்பு காட்ட தொடங்கியுள்ளது. சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் தரமற்ற பொருட்களை தடை செய்யும் நோக்கில், சீன பொருட்களின் தரத்தை ஆராயுமாறு உத்தரவிட்டுள்ள இந்திய அரசு, சீன மற்றும் இந்திய(உள்நாட்டு உற்பத்தி) பொருட்களுக்கு இடையேயான விலை வித்தியாசத்தை ஆராயுமாறும் உத்தரவிட்டுள்ளது. தரம் குறைந்த சீன பொருட்களை இந்தியாவில் இறக்குமதி செய்வதற்கு தடைவிதித்து, அதன்மூலம் இந்தியாவில் உள்நாட்டு உற்பத்தியை ஊக்கப்படுத்த முடிவு செய்துள்ளது.

பிரதமர் அலுவலகத்தில், சுயசார்பு இந்தியா திட்டத்தை ஊக்கப்படுத்துவது குறித்து உயர்மட்ட அதிகாரிகள் இடையேயான ஆலோசனை நடந்திருப்பதாகவும், இறக்குமதியில் இந்தியா சீனாவை அதிகம் சார்ந்திருப்பதை நிறுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

சீனாவிலிருந்து இந்தியா இறக்குமதி செய்யும் பொருட்கள் மற்றும் உற்பத்திக்கு தேவையான மூலப்பொருட்கள் குறித்து இந்திய தொழில்நிறுவனங்களின் கருத்துகளையும் ஆலோசனைகளையும் இந்திய அரசு கோரியுள்ளது. வாட்ச்கள், கடிகாரங்கள், டியூப், கிளாஸ் ராட், தலைமுடி க்ரீம், ஷாம்பு, முகப்பவுடர், பிரிண்டிங் இங்க், பெயிண்ட் உள்ளிட்ட ஏராளமான பொருட்கள் குறித்த கருத்துகள் மற்றும் ஆலோசனைகளை கோரியுள்ளது இந்திய அரசு.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்