மொபைல் ‘ஆப்’களுக்கு தடை; சீனாவுக்கு அடுத்த எச்சரிக்கை

மொபைல் ‘ஆப்’களுக்கு தடை; சீனாவுக்கு அடுத்த எச்சரிக்கை

இந்திய – சீன எல்லையான லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில், நான்கு மாதங்களுக்கு முன், இந்திய – – சீன ராணுவ வீரர்கள் இடையே ஏற்பட்ட மோதலில், நம் வீரர்கள், 20 பேர் வீர மரணம் அடைந்தது நாடு முழுதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.இந்த சம்பவத்தை அடுத்து, இந்தியாவுக்கு எதிராக வன்மம் பாராட்டும் சீனாவையும், அதன் தயாரிப்பு பொருட்களையும் புறக்கணிக்க வேண்டும் என்ற கோரிக்கை, மக்கள் மத்தியில் பரவலாக எழுந்தது. அதனால், இந்திய இறையாண்மைக்கும், பாதுகாப்புக்கும், அச்சுறுத்தலாக இருப்பதாகக் கூறி, ‘டிக்டாக்’ உட்பட, 59 சீன செயலிகளுக்கு மத்திய அரசு, ஜூன் மாதம் தடை விதித்தது.அதன் பின் ஜூலையில், மேலும், 47 செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டது.ஏற்கனவே கொரோனா தொற்று பரவலுக்கு, சீனாவே காரணம் என, உலக நாடுகள் பலவும் கோபத்தில் உள்ளதால், இந்தியாவை தொடர்ந்து மற்ற பல நாடுகளும், சீன செயலிகளுக்குத் தடை விதித்துள்ளன.எல்லையில் தொடர்ந்து தொல்லை கொடுத்து வரும் சீன ராணுவத்திற்கும், அந்நாட்டு நிர்வாகத்திற்கும் எச்சரிக்கை விடுக்கும் விதமாக, அந்நாட்டு நிறுவனங்களின் அன்னிய முதலீட்டிற்கும், சீன நிறுவனங்கள் நம் நாட்டில் உள்கட்டமைப்பு பணிகளில் ஈடுபடவும் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது மற்றொரு அதிரடி நடவடிக்கையாக, மேலும், 118 சீன செயலிகளுக்கு மத்திய அரசு, சமீபத்தில் தடை விதித்துள்ளது.மத்திய அரசால் தடை செய்யப்பட்ட, 118 மொபைல் செயலிகளில் ஒன்று, ‘பப்ஜி’ என்ற விளையாட்டு செயலி. சிறுவர்கள் மற்றும் இளைஞர்களை, ஒரு விதமான விளையாட்டுக்கு அடிமையாக்கி வைத்திருக்கும் பப்ஜி உட்பட பல செயலிகளை உடனே தடை செய்ய வேண்டும் என பல தரப்பில் இருந்தும், அரசுக்கு கோரிக்கைகள் வந்ததால், இந்திய தகவல் தொழில்நுட்ப துறை நடவடிக்கை எடுத்துள்ளது.தகவல் தொழில்நுட்ப சட்டம் 69யி-ன்படியே தடை விதிக்கப்பட்டுள்ளது. பப்ஜி உட்பட தடை செய்யப்பட்ட செயலிகளில் பலவற்றை, கொரோனா ஊரடங்கு அமலில் இருந்த காலத்தில் தான் ஏராளமானோர் பதிவிறக்கம் செய்துள்ளனர்.மத்திய அரசின் தடையானது, பப்ஜி கேமில் தீவிரமாக ஈடுபட்டு வந்தவர்களுக்கு அதிர்ச்சி அளிப்பதாக இருந்தாலும், பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுக்கு நிம்மதியை வரவழைத்து உள்ளது. ஏராளமான மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் எதிர்காலம், இந்த கொடிய விளையாட்டின் கோரப்பிடியில் இருந்து தப்பியுள்ளதாக கூறப்படுகிறது.இந்தியாவில், 17.5 கோடி பேர் உட்பட, உலக அளவில் இந்த செயலியை, 60 கோடி பேர் பதிவிறக்கம் செய்துள்ளனர் ; உலக அளவில் இந்த விளையாட்டை விளையாடி வந்த, 5 கோடி பேரில், ஒரு கோடி பேர் இந்தியர்கள்.நடப்பு ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் மட்டும், பப்ஜி கேம் உருவாக்கிய நிறுவனத்திற்கு 9,700 கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது. அதில் குறிப்பிட்ட பகுதி இந்திய தரப்பில் இருந்து கிடைத்துள்ளது.

இதிலிருந்தே சீன நிறுவனங்கள் எந்த அளவுக்கு ஆதாயம் பார்த்து உள்ளன என்பதை அறியலாம்.சுயசார்பு இந்தியா என்ற கொள்கையை பிரதமர் நரேந்திர மோடி தீவிரமாக வலியுறுத்தி வரும் நிலையில், 118 சீன செயலிகளுக்கு மத்திய அரசு விதித்துள்ள தடையை, இங்குள்ள ‘ஸ்டார்ட் – அப்’ நிறுவனங்கள், தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள முன் வர வேண்டும்.நாட்டின் பொருளாதாரத்தை புனரமைப்பதில் முக்கிய பங்கு வகிக்கக்கூடிய வகையில், தரமான செயலிகளை உருவாக்கி அறிமுகப் படுத்த வேண்டும். அந்த செயலிகள் மாணவர்கள், இளைஞர்களை ஆக்கப்பூர்வமான வகையில் ஈடுபட வைப்பதாக, அவர்களின் செயல்திறனை, முன்னேற்றத்தை ஊக்குவிப்பதாகவும், இந்தியாவின் சட்ட விதிகளுக்கு உட்பட்டதாகவும் இருக்க வேண்டும்.அதேநேரத்தில், நம் நாட்டின் கேளிக்கை மற்றும் பொழுதுப்போக்குத் துறையிலும், மற்ற பல துறைகளிலும் சீன நிறுவனங்கள் ஆதிக்கமும், ஊடுருவலும் தொடர்வது முற்றிலும் தடுக்கப்பட வேண்டும். சீனாவின் பிரபல மொபைல் போன் தயாரிப்பு நிறுவனங்களான, ‘ஓப்போ, ஜியோமி’ போன்றவற்றின், ‘ஸ்மார்ட் போன்’கள் விற்பனை, இந்தியாவில் விற்பனையில், 10க்கு எட்டு என்ற அளவில் உள்ளன. அதுவும் தடுக்கப்பட்டு, இந்திய தயாரிப்பு மொபைல் சாதனங்கள் விற்பனை அதிகரிக்கப்பட வேண்டும்.அவற்றின் தரம் உயர்த்தப்படுவதோடு, குறைந்த விலையில் மக்களுக்கு கிடைக்க வேண்டும். இந்தியாவில் கேம், ஆன்லைன் வாயிலான வருவாய், 2021ம் ஆண்டுகளுக்குள், 8,250 கோடி ரூபாயாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. அதை மற்ற நாட்டு நிறுவனங்கள் கவர்ந்திழுத்து விடாமல் தடுக்கப்பட வேண்டியதும் அவசியம். அதற்கு உள்நாட்டில் மொபைல் செயலி தயாரிப்பில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களுக்கு சலுகைகள் வழங்கப்பட வேண்டியதும் அவசிய தேவை.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்