அமலுக்கு வந்தது முழு ஊரடங்கு சென்னையில் முக்கிய சாலைகள் மூடல்: வெளியே சுற்றினால் கைது; வாகனங்கள் பறிமுதல்

அமலுக்கு வந்தது முழு ஊரடங்கு சென்னையில் முக்கிய சாலைகள் மூடல்: வெளியே சுற்றினால் கைது; வாகனங்கள் பறிமுதல்

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் முழு ஊரடங்கு இன்று முதல் அமலுக்கு வந்தது. அத்தியாவசிய பொருட்கள் வாங்க மக்கள் வாகனங்களில் செல்ல முற்றிலுமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. அண்ணாசாலை மற்றும் மாநகரில் உள்ள முக்கிய சாலைகள் அனைத்தும் மூடப்பட்டன. அனுமதி இல்லாமல் சுற்றுபவர்கள் கைது செய்யப்படுவார்கள், வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்று போலீசார் எச்சரித்துள்ளனர். தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் தாக்குதல் தீவிரமாகி வருகிறது. சென்னையில் கட்டுக்கடங்காமல் சென்று விட்டது. அன்டை மாவட்டங்களான செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 3 மாவட்டங்களில் உள்ள சென்னையை ஒட்டிய பகுதிகளிலும் கொரோனா வைரஸ் தாக்குதல் தீவிரமாகியுள்ளன.உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன. தமிழ்நாட்டில் கடந்த 2 நாட்களாக பாதிப்புகளின் எண்ணிக்கை 2 ஆயிரத்தை தாண்டியுள்ளன. உயிரிழப்புகளும் 40ஐ தாண்டியது.

இதனால், கட்டுக்கடங்காமல் பரவியுள்ள வைரசை கட்டுப்படுத்தும் வகையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் இன்று முதல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு வரும் 30ம் தேதி வரை அமுல்படுத்தப்பட உள்ளன. வழக்கத்தை விட இந்த முறை ஊரடங்கு உத்தரவை கடுமையாக கடைபிடிக்கும்படி அரசு சார்பில் போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே, சென்னை மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 288 இடங்களில் வாகன சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு நள்ளிரவு முதல் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. அண்ணாசாலை, ஈவெரா சாலை, காமராஜர் சாலைகள் நேற்று நள்ளிரவே மூடி சீல் வைக்கப்பட்டன. சாலைகளில் பல்வேறு இடங்களில் இரும்பு தடுப்புகள் அமைத்துள்ளனர்.

மேலும், செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களிலும் மாவட்ட போலீசார் மாவட்ட எல்லைகள் மற்றும் பிரதான சாலைகளில் 14 இடங்களில் வாகன ேசாதனை சாவடிகள் அமைத்து கண்காணித்து வருகின்றனர். இந்த பணியில் மொத்தம் 18 ஆயிரம் போலீசார் ஈடுபட்டுள்ளனர். அத்தியாவசிய பொருட்கள் வாங்க மக்கள் வாகனங்களில் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. 21, 28ம் தேதிகளில் (ஞாயிற்றுக்கிழமை) மருத்துவ பயன்பாட்டு வாகனங்களை தவிர்த்து எந்த வாகனங்களும் இயங்க அனுமதி இல்லை. அதையும் மீறி வாகனங்களில் செல்லும் நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்று போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து போலீஸ் கமிஷனர் ஏ.ேக.விஸ்வநாதன் நிருபர்களிடம் கூறியதாவது: ஊரடங்கின் போது மக்கள் பொருட்கள் வாங்க பைக் மற்றும் கார்களை எடுத்து செல்ல அனுமதியில்லை. பொருட்கள் வாங்க 2 கிலோ மீட்டர் தொலைவிற்குள் தான் செல்ல வேண்டும். மருத்துவ தேவை, ரயில் நிலையம், விமான நிலையங்கள் செல்லும் நபர்கள் அதற்கான அடையாள அட்டைகளை காட்டினால் மட்டும் அனுமதிக்கப்படுவார்கள். சென்னை பெருநகர் வெளியே பணிபுரியும் நபர்கள் தினசரி சென்று வர அனுமதி இல்லை. தொழிற்சாலையில் மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் நபர்கள் அங்கேயே தங்கி கொள்ள வேண்டும் என்று அரசு உத்தரவு உள்ளது.

அத்தியாவசிய தேவை இல்லாமல் வெளியே வரும் நபர்கள் டிரோன் கேமரா மூலம் கண்காணிக்கப்படுவார்கள். நகரில் இருந்து வெளியே செல்லவும், உள்ளே வரமும் முறையான அனுமதி இல்லையென்றால் அவர்கள் கைது செய்யப்படுவார்கள். போலி இ-பாஸ் பயன்படுத்தி வரும் நபர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல், முகக்கவசம் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்காமல் இருக்கும் நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படும். அதேபோல், சென்ற முறைப்படி அண்ணாசாலை, காமராஜர் சாலை என மாநகரில் உள்ள முதன்மை சாலைகள் அனைத்தும் மூடப்படும். ஆம்புலன்ஸ் செல்ல மட்டும் தான் திறக்கப்படும். கடைகளில் முறையாக சமூக இடைவெளி இல்லாமல் பொருட்கள் வாங்க கூட்டமாக இருந்தால் சம்பந்தப்பட்ட கடை உடனே மூடப்படும். பொருட்கள் விற்பனை செய்யும் கடை உரிமையாளர்கள் கட்டாயம் நேரம் கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டும்.

மருத்துவ சேவைகளுக்காக பெறப்பட்ட அனுமதி தவிர மற்றவர்கள் இதற்கு முன்னால் அனுமதி பெற்று இருந்தால், மறு அனுமதி பெற வேண்டும். திருமணத்திற்கு ஏற்கனவே அனுமதி பெறு இருந்தாலும் தற்போது புதிதாக அனுமதி பெற வேண்டும். முன்பு இருந்த ஊரடங்கின் போது கொடுக்கப்பட்ட இ-பாஸ் அனைத்தும் தற்போது செல்லாது. புதிதாக தான் இ-பாஸ் எடுக்க வேண்டும். இதுவரை மாநகரில் 788 போலீசார் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில், 300 பேர் குணமடைந்துவிட்டனர். 39 பேர் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். 248 பேர் அரசின் தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளில் உள்ளனர். 216 பேர் வீட்டு தனிமையில் உள்ளனர். இது ஒரு அசாதரண சூழ்நிலை, நோய் தொற்று தீவிரமடைந்து இருப்பதால் சென்னை மற்றும் புற நகர் பகுதிகளை பாதுகாப்பதற்காக எடுக்கப்படும் நடவடிக்கைக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

இன்ஸ்பெக்டர்களுக்கு முழு அதிகாரம்
ஊரடங்கின்போது அரசு உத்தரவை மதிக்காத, சமூக இடைவெளி பின்பற்றாத நபர்கள், முக கவசம் அணியாத நபர்கள், வாகன ஓட்டிகள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் மீது நடவடிக்கை எடுக்க அந்தந்த காவல் நிலைய இன்ஸ்பெக்டர்களுக்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்