இந்து தீவிரவாத பேச்சு… டெல்லி நீதிமன்றத்தில் கமல் மீது வழக்கு!

இந்து தீவிரவாத பேச்சு… டெல்லி நீதிமன்றத்தில் கமல் மீது வழக்கு!

புதுடெல்லி:

சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என பிரச்சார கூட்டத்தில் பேசிய கமலஹாசன் மீது, இந்து சேனா அமைப்பு வழக்கு தொடர்ந்துள்ளது.

தமிழகத்தின் அரவக்குறிச்சி தொகுதியில் பள்ளப்பட்டி பிரச்சார கூட்டத்தில் பேசிய கமல், இஸ்லாமியர்கள் அதிகம் பேர் இருக்கும் இடம் என்பதால் சொல்லவில்லை; காந்தி சிலைக்கு முன் சொல்கிறேன். சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து அவர் பெயர் கோட்சே என்றார். மேலும் காந்தியின் மானசீக கொள்ளுப் பேரனாக, அந்த கொலைக்கு கேள்வி கேட்க வந்திருப்பதாக கூறியிருந்தார்.

கமலின் இந்த பேச்சு தமிழகம் மட்டுமன்றி நாடுமுழுவதும் எதிரொலித்து கடும் சர்ச்சைக்குள்ளானது. பா.ஜ., மற்றும் அதிமுக தலைவர்கள் கமலின் இந்த சர்ச்சை பேச்சுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்தனர். சிவசேனா உள்ளிட்ட கட்சிகளும் இதை வன்மையாக கண்டித்துள்ளது.

இந்நிலையில், கமலஹாசனின் இந்த விமர்சனம் குறித்து, டெல்லி பாட்டியாலா வளாகத்தில் உள்ள நீதிமன்றத்தில் இந்து சேனா அமைப்பு இன்று கிரிமினல் வழக்கு தொடர்ந்துள்ளது.

தீவிரவாதத்தோடு இந்து மதத்தை தொடர்புபடுத்தி, இந்து மக்களின் மத உணர்வுகளை காயப்படுத்தி விட்டதாக கமலஹாசன் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு நாளை மறுநாள் விசாரணைக்கு வருகிறது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்