169 பெண் ஊழியர்களை விமானத்தில் அனுப்பி வைத்த வில்லன்

  • In Cinema
  • May 30, 2020
  • 154 Views
169 பெண் ஊழியர்களை விமானத்தில் அனுப்பி வைத்த வில்லன்

பாலிவுட் நடிகர் சோனு சூட் ஏற்பாடு செய்த சிறப்பு விமானத்தில், கேரளாவிலிருந்து ஒடிசாவுக்கு 169 புலம்பெயா்ந்த பெண் தொழிலாளா்கள் திரும்பியுள்ளார்கள்.

கரோனா நோய்த்தொற்று பரவலுக்குப் பிறகு, வாழ்வாதாரத்தை இழந்த வெளிமாநிலத் தொழிலாளா்கள் போக்குவரத்து வசதிகள் முடங்கியதன் காரணமாக தங்கள் சொந்த ஊா்களுக்கு நடந்தே திரும்ப வேண்டிய பரிதாப நிலைக்குத் தள்ளப்பட்டனா்.

கரோனா தடுப்பு பொது முடக்கத்தில் தளா்வு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், புலம் பெயா்ந்த தொழிலாளா்கள் தங்களது சொந்த ஊா்களுக்குச் சிறப்பு ரயில், சிறப்புப் பேருந்துகளின் மூலம் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனா்.ஆனால், புலம்பெயர் தொழிலாளர்களுக்குப் பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய பேருந்து, ரயில் பயணங்களின் மூலம் அனுப்புவதற்குப் பதிலாக சில மணி நேரப் பயணத்தில் விமானங்கள் மூலம் அனுப்பலாம் என்று பலர் ஆலோசனை தெரிவித்தார்கள். இதைச் செய்து காண்பித்துள்ளார் பிரபல பாலிவுட் நடிகர் சோனு சூட்.

இந்தியாவில் அமலில் இருக்கும் ஊரடங்கு உத்தரவால் வேலையை இழந்தும் வருமானம் இல்லாமலும் பலர் தவிக்கிறார்கள். பிரபல பாலிவுட் நடிகர் சோனு சூட், மும்பையில் பல ஆயிரம் பேருக்கு உணவளித்து வருகிறார். மும்பை மாநகராட்சியுடன் இணைந்து இந்த உதவிகளை அவர் செய்து வருகிறார். தனது ஹோட்டலை மருத்துவ ஊழியர்கள் பயன்படுத்துவதற்கும் அனுமதி வழங்கியுள்ளார். மேலும் வெளிமாநிலத் தொழிலாளர்கள் பலர் தங்கள் சொந்த ஊருக்குத் திரும்பவும் அவர் உதவி வருகிறார். கடந்த ஒரு மாதத்தில் 12,000 தொழிலாளர்களைப் பேருந்துகள் மூலமாக அவர்களுடைய சொந்த ஊருக்கு அனுப்பியுள்ளார்.

இந்நிலையில் ஒடிசா கேந்திராபரா மாவட்டத்தைச் சேர்ந்த 169 பெண்கள் கேரளாவின் எர்ணாகுளத்தில் உள்ள ஒரு ஃபேக்டரியில் பணிபுரிந்து வந்தார்கள். ஊரடங்கு காரணமாக ஃபேக்டரி மூடப்பட்டதால் அவர்களுடைய நிலைமை கேள்விக்குறியானது. சம்பளமும் தரப்படவில்லை. இதனால் எங்களை எப்படியாவது ஊருக்கு அனுப்பி வைக்க உதவுங்கள் என்று பெண்கள் ஒன்றிணைந்து விடியோ மூலமாகக் கோரிக்கை வைத்தார்கள். இவர்களுடைய பதிவு சமூகவலைத்தளங்களில் பலராலும் பகிரப்பட்டது. இதைக் கண்ட நடிகர் சோனு சூட், அவர்களுக்கு உதவ முன்வந்தார்.

இந்நிலையில் அத்தனை பெண்களும் சொந்த ஊருக்கு விமானம் மூலம் திரும்ப அவர் உதவியுள்ளார். கொச்சி விமான நிலையத்திலிருந்து ஏர் ஏசியா விமானம் மூலமாக ஓடிஷாவின் புவனேஸ்வர் விமான நிலையத்துக்கு நேற்று வந்திறங்கினார்கள். இவர்களுடன் அதே விமானத்தில் 9 தொழிலாளர்களும் இணைந்து பயணித்து ஒடிசாவுக்குத் திரும்பியுள்ளார்கள். அனைத்து தொழிலாளர்களின் விமானப் பயணச் செலவையும் சோனு சூட் ஏற்றுக்கொண்டுள்ளார். இவருடைய இந்தச் செயலுக்குப் பலரும் பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார்கள்.

கள்ளழகர், நெஞ்சினிலே ஆகிய தமிழ்ப் படங்களின் மூலம் திரையுலகுக்கு அறிமுகமான சோனு சூட், மஜ்னு, ராஜா, சந்திரமுகி, ஒஸ்தி, தேவி, தேவி 2 போன்ற ஏராளமான தமிழ்ப் படங்களிலும் ஹிந்திப் படங்களிலும் நடித்துள்ளார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்