ஜல்லிக்கட்டுக்கு மீண்டும் தடை… பிரச்னையை கிளப்பும் பீட்டா..!

ஜல்லிக்கட்டுக்கு மீண்டும் தடை… பிரச்னையை கிளப்பும் பீட்டா..!

புதுடெல்லி:

மாடுகளின் வால்கள் கடிக்கப்படுவதாகவும், மூக்கில் ரத்தம் வடிவதாகவும் ஜல்லிக்கட்டு குறித்து மீண்டும் புதிய பிரச்னையை கிளப்பும் வகையில், பீட்டா அமைப்பு தெரிவித்துள்ளது.

ஜல்லிக்கட்டு போட்டியின்போது மாடுகள் தாக்குதலுக்கு உள்ளாவது குறித்து, 73 பக்க அறிக்கையை பீட்டா தரப்பில் வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில், ஜல்லிக்கட்டு போட்டியின்போது மாடுகள் தாக்கப்படுவது குறித்து தெரிவித்துள்ளது.

பீட்டா அமைப்பின் சார்பில், ஏற்கெனவே ஜல்லிக்கட்டு தடை விதிக்க வேண்டும் என தொடரப்பட்ட வழக்கால், சென்னை மெரினாவில் இளைஞர்களின் போராட்டம் வீரியமடைந்து, உலகம் முழுவதும் பரவியது. இந்த ஜல்லிக்கட்டு போராட்டம் உலக வரலாற்றிலேயே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியநிலையில், மத்திய அரசையும், மாநில அரசையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்த போராட்டத்தின் விளைவாக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, பீட்டாவின் இந்த எதிர்ப்பு முறியடிக்கப்பட்டு தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடந்து வருகின்றன.

இந்நிலையில், பீட்டா அமைப்பு தற்போது 73 பக்க ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், ஜல்லிக்கட்டு போட்டியின்போது மாடுகளின் வால்கள் கடிக்கப்படுவதாகவும், முறுக்கப்படுவதாகவும், கூட்டத்தை நோக்கி வேகமாகச் செல்வதற்காக மூக்கணாங்கயிறு வெடுக்கென இழுக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.

மேலும், மூக்கணாங்கயிறை இழுக்கும்போது மாடுகளுக்கு காயம் ஏற்படுவதாகவும், பதற்றத்துக்கு ஆளான மாடுகள் பார்வையாளர்கள் பக்கம் பாய்ந்து அவர்களை தாக்குவதாகவும், இதனால், சிலர் உயிரிழக்க நேரிடுகிறது. தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு அனுமதிக்குபின், பொதுமக்கள் 43 பேர், காளைகள் 14 மற்றும் ஒரு பசு ஆகியவை உயிரிழந்திருப்பதாக பீட்டா குற்றம் சாட்டியுள்ளது.

இதுகுறித்து பீட்டா அமைப்பின் இந்திய தலைமை செயல் அதிகாரி கூறுகையில், ‘‘நாங்கள் மேற்கொண்ட ஆய்வில் ஒவ்வொரு ஆண்டும் மனிதர்களும், மாடுகளும் ஜல்லிக்கட்டில் உயிரிழப்பது தெரியவந்துள்ளது. வேண்டுமென்றே ஜல்லிக்கட்டில் கலந்து கொள்வதற்கு மாடுகள் கட்டாயப்படுத்தப்படுகின்றன. நாகரிகமுள்ள, முற்போக்கு சிந்தனையுள்ள சமூகத்தில் ஜல்லிக்கட்டு போன்ற ஆபத்தான விளையாட்டுகள் தேவையற்றது. இதற்கு உடனடியாக தடைவிதிக்க வேண்டும் என்று பீட்டா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது’’ என அவர் தெரிவித்தார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்