இந்தியாவில் சிறப்பாக ஆட்சி செய்யப்படும் மாநிலலங்கள் குறித்து இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் தலைமையிலான பொது விவகாரங்கள் மையம் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் ஆய்வு செய்து தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. நிலையான வளர்ச்சியின் அடிப்படையில் நிர்வாக செயல்திறன் பகுப்பாய்வு செய்யப்பட்டு இந்த தரவரிசை வெளியிடப்பட்டுள்ளது.
அதில், கேரள மாநிலம் 1.388 குறியீட்டுப் புள்ளியுடன் முதலிடத்தை பிடித்துள்ளது. தமிழகம் 0.912 புள்ளியுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது. ஆந்திரா (0.531), கர்நாடகம் (0.468) ஆகிய மாநிலங்கள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. முதல் நான்கு இடங்களை தென் மாநிலங்கள் பிடித்துள்ளன.உத்தர பிரதேசம், ஒடிசா மற்றும் பீகார் ஆகிய மாநிலங்கள் மைனஸ் குறியீட்டு புள்ளியுடன் கடைசி இடத்தில் உள்ளன. உத்தர பிரதேசம் -1.461 புள்ளியும், ஒடிசா -1.201 புள்ளியும், பீகார் -1.158 புள்ளியும் பெற்றுள்ளன.
சிறிய மாநிலங்கள் பிரிவில் கோவா மாநிலம் 1.745 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. மேகாலயா (0.797), இமாச்சல பிரதேசம் (0.725) அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. மிகவும் மோசமாக ஆளப்படும் மாநிலமாக மணிப்பூர் (-0.363), டெல்லி (-0.289), உத்தரகாண்ட் (-0.277) ஆகிய மாநிலங்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளன.
யூனியன் பிரதேசங்களில் சிறப்பாக ஆளப்படும் மாநிலமாக சண்டிகர் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த மாநிலம் 1.05 புள்ளிகளை பெற்றுள்ளது. அதனைத் தொடர்ந்து புதுச்சேரி (0.52) மாநிலம் இரண்டாவது இடத்தில் உள்ளது. லட்சத்தீவு 0.003 புள்ளியுடன் மூன்றாம் இடத்தில் உள்ளது. தாதர் நகர் ஹாவேலி -0.69 புள்ளி, அந்தமான், ஜம்மு காஷ்மீர் தலா -0.50 புள்ளி, நிகோபார் -0.30 புள்ளி பெற்று கடைசி இடங்களில் உள்ளன.