கன்னியாகுமாரியில் ஒருநாள் முன்னதாக பக்ரீத் கொண்டாட்டம்

கன்னியாகுமாரியில் ஒருநாள் முன்னதாக பக்ரீத் கொண்டாட்டம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் கேரளாவைப் பின்பற்றி ஒரு நாள் முன்னதாக இன்று பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட்டது. வீடுகளிலேயே தனிமனித இடைவெளியுடன் இஸ்லாமியர்கள் தொழுகை நடத்தினர்.

முஸ்லிம்களின் தியாகத் திருநாளான பக்ரீத் பண்டிகை நாடு முழுவதும் நாளை கொண்டாடப்படுகிறது. வழக்கமாக கேரளாவில் ரம்ஜான், பக்ரீத் பண்டிகை போன்றவை ஒரு நாள் முன்னதாகவே கொண்டாடப்படும்.

இதை பின்பற்றி கேரளாவின் அண்டை மாவட்டமான கன்னியாகுமரியிலும் கொண்டாடுவர். இந்த ஆண்டும் பக்ரீத் பண்டிகையை கேரளாவில் இஸ்லாமியர்கள் இன்றே கொண்டாடினர். அதைப்போன்று தமிழகத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டும் இன்று பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட்டது.கரோனா ஊரடங்கால் பள்ளி வாசல், மசூதிகளில் தொழுகை நடத்த தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், வீடுகளிலே தனிமனித இடைவெளியுடன் இஸ்லாமியர்கள் தொழுகை நடத்தினர்.

நாகர்கோவில் இடலாக்குடி, இளங்கடை, வடசேரி, கன்னியாகுமரி, திட்டுவிளை, தக்கலை, திருவிதாங்கோடு, குளச்சல், மணவாளகுறிச்சி, தேங்காய்பட்டணம், திங்கள்நகர், குலசேகரம், களியக்காவிளை உட்பட கன்னியாகுமரி மாவட்டத்தில் இஸ்லாமியர்கள் குடும்பத்தினருடன் வீட்டு மொட்டை மாடி, மற்றும் வீட்டு வளாகங்களில் அதிகாலையிலே சமூக இடைவெளியுடன் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.

மேலும் முஸ்லிம் சிறுவர் சிறுமியர்களில் இருந்து முதியோர் வரை புத்தாடை அணிந்து ஒருவொருக்கொருவர் பக்ரீத் வாழ்த்தைத் தெரிவித்து கொண்டனர். மேலும் குர்பானி கொடுத்து நண்பர்கள், உறவினர்களுடன் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்