பேச்சுக்கு இடையே படைகளை குவிக்கும் சீனா; எல்லையில் மீண்டும் தீவிரமாகிறது பிரச்னை?

பேச்சுக்கு இடையே படைகளை குவிக்கும் சீனா; எல்லையில் மீண்டும் தீவிரமாகிறது பிரச்னை?

இந்தியா – சீனா எல்லையில், படைகளை திரும்ப பெறுவது தொடர்பாக, ராணுவ பேச்சு நடைபெறும் நிலையில், எல்லை கட்டுப்பாட்டு பகுதியில், சாலைகள், படைகள் தங்குவதற்கு கூடாரங்கள் அமைப்பதில், சீனா முழு வீச்சில் ஈடுபட்டு வருவதாக, தகவல்கள் வெளியாகி உள்ளன. இதையடுத்து, எல்லைப் பிரச்னை, மீண்டும் தீவிரமடைந்துள்ளது.இந்தியா — சீனா எல்லையில், கடந்த சில மாதங்களாக நிலவி வரும் பதற்றத்தை தணிக்க, இருதரப்பிலும் பேச்சு நடந்து வருகிறது. இந்நிலையில், எல்லை கட்டுப்பாட்டு பகுதியில், சாலைகள் அமைப்பது, படைகள் தங்குவதற்கு பெரும் கூடாரங்கள் அமைக்கும் பணியில், சீனா முழு வீச்சில் ஈடுபட்டு வருவதாக, தகவல்கள் வெளியாகி உள்ளன.திபெத் எல்லையில் உள்ள, கியான்சே என்ற இடத்தில், கடந்த ஜனவரியில் இருந்து, ராணுவ படைகள் தங்குவதற்கான வசதிகள் செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.அப்பகுதியில், 600க்கும் மேற்பட்ட வாகனங்களின் போக்குவரத்து தென்படுவதாகவும், அங்கிருந்து 14 கி.மீ., தொலைவில், ஆயுத படைகள் குவிக்கப்பட்டு வருவதாகவும், அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.இது குறித்து, மேலும் அவர் கூறியதாவது:சீனா, தங்கள் படைப்பிரிவை குவித்து வரும் புதிய இடத்தில் இருந்து, அருணாச்சல பிரதேசத்தின் மேற்கு பகுதிக்கும், சிக்கிம் நோக்கியும், எளிதாக நகர முடியும். கடந்த, ஜூன் — ஜூலையில் கிடைத்த புகைப்படங்களின் அடிப்படையில், கிழக்கு பகுதியில், இந்திய எல்லையை இணைக்கும் விதமாக, சாலைகள் அமைக்கும் பணியில், சீனா தீவிரமாக ஈடுபட்டு வருவது தெரிகிறது. இவ்வாறு அவர் கூறினார்.இந்நிலையில், சீன ராணுவ அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர், வூ குயான், பத்திரிகையாளர்கள் சந்திப்பில், நேற்று கூறியதாவது: இரு நாட்டு ராணுவ உயர்மட்ட அதிகாரிகளின், பலசுற்று பேச்சுக்கு பிறகும், எல்லையில், கடந்த ஏப்ரலுக்கு முன்பிருந்த நிலை திரும்பவில்லை. இந்த விவகாரத்தில், இந்தியா சில முடிவுகளில் உறுதியாக இருக்க வேண்டும்.

தவறான முடிவுகளை தவிர்க்க வேண்டும். வேறுபாடுகளை தீவிரப்படுத்தி, அதை சச்சரவுகளாக ஆக்க கூடாது, இருதரப்பு உறவுகள், முன்பு போல இயல்பு நிலைக்கு திரும்ப, திடமான நடவடிக்கை தேவை. இவ்வாறு, அவர் கூறினார். இதற்கு பதில் அளித்த, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், ‘எல்லையில் மீண்டும் அமைதி திரும்புவது என்பது, இருதரப்பு ஒத்துழைப்பும் இருந்தால் மட்டுமே சாத்தியமாகும்’ என, திட்டவட்டமாக நேற்று தெரிவித்தது.பிரச்னை தீராதது கவலை அளிக்கிறதுஇந்தியா – சீனா எல்லையில் தற்போதுள்ள நிலைமை, மிகவும் மோசமாகவே உள்ளது. கடந்த, 1962ல் நடந்த இந்தியா — சீனா போருக்குப் பின் ஏற்பட்ட சில பிரச்னைகள், பேச்சு மூலம் தீர்க்கப்பட்டன. ஆனால், மூன்றரை மாதங்களுக்கு மேலாகியும், எல்லையில் இரு ராணுவமும் தொடர்ந்து முகாமிட்டிருப்பது, கவலை அளிப்பதாக உள்ளது.- ஜெய்சங்கர், வெளியுறவுத்துறை அமைச்சர்

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்