இருவர் கொலை: 3 பேருக்கு போலீஸ் காவல்

இருவர் கொலை: 3 பேருக்கு போலீஸ் காவல்

ஒசூர்:

பெட்ரோல் குண்டு வீசி 2 பேரை கொன்ற வழக்கில் சரணடைந்த மூவருக்கு 6 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க ஒசூர் நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த உத்தனப்பள்ளி அருகே சானமாவு என்ற இடத்தில் கார் மீது லாரியை மோத விட்ட கூலிப்படையினர், கார் மீது பெட்ரோல் குண்டுகளை வீசினார்கள். இதில் காரில் சென்ற டிரைவர் முரளி, ஓசூர் பெண் தொழில் அதிபர் நீலிமா ஆகியோர் கொல்லப்பட்டனர். இந்த இரட்டை கொலை வழக்கு தொடர்பாக உத்தனப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

தொழில் போட்டி காரணமாக நீலிமாவின் உறவினரான ஓசூர் தொழில் அதிபர் ராமமூர்த்தி கூலிப்படையை ஏவி இந்த கொலையை செய்தது விசாரணையில் தெரிய வந்தது. இது தொடர்பாக மதுரையைச் சேர்ந்த லாரி டிரைவர் மகராஜன், ஓசூரைச் சேர்ந்த ஆனந்தன், சாந்தகுமார், மதுரையைச் சேர்ந்த லாரி உரிமையாளர் நீலமேகம், அசோக், சூளகிரி கோபசந்திரம் ராமு, மஞ்சுநாத், கோபால் ஆகிய 8 பேரை போலீசார் கைது செய்தனர். மதுரை வக்கீல் வெங்கட்ராமன் சேலம் நீதிமன்றத்திலும், அம்பலவாணன், ராமகிருஷ்ணன் ஆகிய 2 பேரும் தேனி மாவட்டம் பெரியகுளம் நீதிமன்றத்திலும் சரண் அடைந்தனர்.

பின்னர் அம்பலவாணனும், ராமகிருஷ்ணனும் ஓசூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சேலம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த நிலையில் இந்த வழக்கில் சரண் அடைந்த வக்கீல் வெங்கட்ராமன், அம்பலவாணன், ராமகிருஷ்ணன் ஆகிய 3 பேரையும் 6 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி கேட்டு உத்தனப்பள்ளி போலீசார் ஓசூர் ஜே.எம்.2 கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். அந்த மனு மாஜிஸ்திரேட்டு தாமோதரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

இதற்காக வக்கீல் வெங்கட்ராமன், அம்பலவாணன், ராமகிருஷ்ணன் ஆகிய 3 பேரும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சேலம் மத்திய சிறையில் இருந்து ஓசூர் ஜே.எம்.2 கோர்ட்டுக்கு அழைத்து வரப்பட்டனர்.

பின்னர் அவர்கள் 3 பேரும் மாஜிஸ்திரேட்டு முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதைத் தொடர்ந்து 3 பேரையும் 6 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி அளித்து மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார். இதையடுத்து அவர்களை போலீசார் விசாரணைக்காக உத்தனப்பள்ளி அழைத்து சென்றனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்