சென்னையில் கோர முகத்தை காட்ட தொடங்கிய கொரோனா: ஒரே நாளில் 19பேர் உயிரிழப்பு

சென்னையில் கோர முகத்தை காட்ட தொடங்கிய கொரோனா: ஒரே நாளில் 19பேர் உயிரிழப்பு

* இறப்பு எண்ணிக்கை அதிகரிப்பால் மக்கள் அச்சம்
* சென்னையில் கொரோனா தொற்றுக்கு பாதிக்கப் பட்டவர்களின் இறப்பு அதிகரித்து வருவது மக்களிடையே
அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை,: சென்னையில் உள்ள மருத்துவமனைகளில் கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்தவர்களில் நேற்று ஒரே நாளில் 19 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து இறப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் மட்டும் சென்னையில் 624 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதை சேர்த்து சென்னையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 9,989 ஆக உயர்ந்துள்ளது.இதில் 4042 பேர் குணமடைந்துள்ளனர். 70 பேர் உயிரிழந்துள்ளனர். 5,815 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதை தவிர்த்து பிற மாவட்டங்களைச் சேர்ந்த சேர்ந்த 60 பேர் சென்னையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நேற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை சேர்த்தால் மொத்தம் 10 ஆயிரத்தை தாண்டியது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை போன்று, தற்போது உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் சென்னையில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் 19 பேர் உயிரிழந்துள்ளனர். அதன்படி கொத்தவால்சாவடி பருப்பு மண்டியில் பணியாற்றிய 52 வயது முதியவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நபர், ராயபுரத்தை சேர்ந்த 75 வயது மூதாட்டி, எர்ணாவூரை சேர்ந்த 64 வயது முதியவர், வியாசர்பாடியை சேர்ந்த 44 வயது ஆண், பழைய வண்ணாரப் பேட்டை பகுதியை சேர்ந்த 60 வயது மூதாட்டி, கொருக்குப்பேட்டை பகுதியை சேர்ந்த 60 வயது மூதாட்டி, ராயபுரத்தை சேர்ந்த 69 வயது மூதாட்டி, புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த 50 வயது பெண், மண்ணாடி பகுதியை சேர்ந்த 60 வயது மூதாட்டி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

பிராட்வே பகுதியை சேர்ந்த 65 வயது மூதாட்டி உள்ளிட்ட 10 பேர் ஸ்டான்லி மருத்துவமனையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை முதல் நேற்று காலை வரை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஆவடியை சேர்ந்த 65 வயது முதியவர், அமைந்தகரையை சேர்ந்த 30 வயது ஆண், மேற்கு தாம்பரத்தை சேர்ந்த 50 வயது ஆண், திருவல்லிக்கேணியை சேர்ந்த 52 வயது ஆண் ஓமந்தூரார் மருத்துவமனையில் கடந்த 17ம் தேதி அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதேபோல் ராயப்பேட்டையை சேர்ந்த 58 வயது பெண் ஓமந்தூரார் மருத்துவமனையில் உயிரிழந்தார். கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திருவல்லிக்கேணியை சேர்ந்த 85 வயது முதியவர் உயிரிழந்தார்.

சென்னை கேஎம்சியில் அனுமதிக்கப்பட்டு இருந்த அரும்பாக்கம் அசோகா நகரை சேர்ந்த 56 வயது ஆண் நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதேபோல் அரும்பாக்கம் எம்எம்டிஏ காலனியை சேர்ந்த 60 வயது மூதாட்டி உயிரிழந்தார். கிண்டியை சேர்ந்த 35 வயது பெண் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் உயிரிழந்தார். இந்நிலையில் தமிழக சுகாதாரத்துறை சார்பில் வெளியிட்ட அறிவிப்பில் தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி 8 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். ஆனால் சென்னையில் மட்டும் நேற்று ஒரேநாளில் 19 பேர் கொரோனா பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடதக்கது. இவ்வாறு தொடர்ந்து சென்னையில் இறப்பு அதிகரித்து வருவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் போதிய இடவசதி இல்லாததால் நோயாளிகள் பெரும் சிரமப்படுகின்றனர். இங்கு 50 பேருக்கு ஒரு கழிப்பிட வசதி தான் உள்ளது. இதன் மூலம் நோய் தொற்று பரவ அதிக வாய்ப்புள்ளது. போதிய வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்று சுகாதாரத்துறையிடம் கேட்டாலும் கண்டுகொள்ளாமல் உள்ளனர். எனவே, ஸ்டான்லி மருத்துவமனையில் போதிய வசதி செய்து தர வேண்டும். இல்லாவிட்டால் கொரோனா பாதிப்பில் உயிரிழப்பு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு தான் இருக்கும் என்று சிகிச்சை பெற்று வருபவர்கள் கூறுகின்றனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்