உலக சாதனை சிறுமி (எக்ஸ்குளூசிவ்..)

  • In Sports
  • November 13, 2019
  • 517 Views
உலக சாதனை சிறுமி (எக்ஸ்குளூசிவ்..)

ஒசூர்:

பெண் குழந்தைகளை வீட்டின் சுமையாக நினைக்கும் சில பெற்றோர்கள் மத்தியில், 5 வயதில் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்று பெற்றோருக்கு சிறுமி ஸ்வேதாஸ்ரீ பெருமை சேர்த்துள்ளார்.

இந்த சிறுமியின் அசாத்திய துணிச்சல் எப்படி வந்தது. என்பதை இந்த செய்தி தொகுப்பின் மூலம் தெரிந்துகொள்வோம்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்த சப்படி என்னும் கிராமத்தில் தையற் தொழில் செய்து வரும் பவித்ராமன், அழிந்து வரும் தமிழர்களின் பாரம்பரிய கலைகளில் ஒன்றான சிலம்பத்தை உயிர்பிக்க வேண்டுமென்கிற நோக்கத்துடன் தான் கற்ற கலையை பள்ளி மாணவர்களுக்கு பகுதி நேரமாக கற்பித்து வருகிறார்.

பவித்ராமன் – அனிதா ஆகிய தம்பதிகளின் மூத்த மகள் ஸ்வேதாஸ்ரீ (5), இவர் தனியார் பள்ளியில் யூகேஜி படித்து வருகிறார்.

தந்தை சிலம்ப பயிற்சியாளராக இருப்பதால், வீட்டில் உள்ள சிலம்ப கம்பை குறும்புத்தனமாக எடுத்து சுற்றி வந்துள்ளார்.

பவித்ராமனுக்கு இளைய மகள் மேகாஸ்ரீ (4) உள்ள நிலையில், தாய் அனிதாவால் சமாளிக்க முடியாதென மாலை தோறும் சிலம்ப பயிற்சிக்கு ஸ்வேதா ஸ்ரீ யை உடன் அழைத்து செல்வதை வாடிக்கையாக கொண்டு வந்துள்ளார்.

தந்தை பயிற்சி அளிப்பதை பார்த்த ஸ்வேதா ஸ்ரீ தானாகவே சிலம்பத்தை பயிற்சியின்றி முயற்சி செய்து வருவதை பார்த்த தாயார் அனிதா கணவரிடம் மற்ற பிள்ளைகளுக்கு பயிற்சி வழங்கும் நேரத்தில் பெற்ற மகளுக்கு பயிற்சி வழங்கினால் என்னவென வினவி உள்ளார்.

மனைவியின் பேச்சிற்காக ஸ்வேதா ஸ்ரீ க்கு பயிற்சி அளிக்க தொடங்கிய பவித்ராமன், தன்னிடம் பயிலும் மாணவர்கள் பிற இடங்களில் பங்கேற்கும் போட்டிகளில் ஸ்வேதா ஸ்ரீ யையும் பங்கேற்க வைத்துள்ளார்.

ஸ்வேதா ஸ்ரீ சிலம்பாட்டத்தை கற்க தொடங்கிய சில மாதங்களிலேயே நன்கு தேரியவராக கிருஷ்ணகிரி மாவட்ட அளவிலான போட்டிகளில் முதலிடமும், ஈரோட்டில் நடைப்பெற்ற மாநில அளவிலான சிலம்ப போட்டியில் முதலிடமும், கோவா மற்றும் சேலம் ஆகிய இடங்களில் நடைப்பெற்ற உலக,தேசிய அளவிலான சிலம்ப போட்டிகளிலும் முதல் பரிசை வென்று பெற்றோருக்கே இன்ப அதிர்ச்சியை அளித்துள்ளார் ஸ்வேதா ஸ்ரீ.

இந்தாண்டு மார்ச் மாத தொடக்கத்தில் பயிற்சியை தொடங்கிய ஸ்வேதா ஸ்ரீ 8 மாதங்களுக்குள்ளாகவே பல்வேறு இடங்களில் நடைப்பெற்ற சிலம்ப போட்டிகளில் கலந்துக்கொண்டு முதல்பரிசை பெற்று அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

பங்கேற்கும் சிலம்ப போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவியாக மட்டும் இல்லாமல், படிப்பிலும் சுட்டியாகவும் ஸ்வேதா ஸ்ரீ இருந்து வருகிறார்.

5 வயதேயான ஸ்வேதா ஸ்ரீ, சிலம்பாட்டத்தில் சிறுவயதினருக்கான உலக சாதனையாளராக்க தந்தையும் பயிற்றுநரான பவித்ராமன் விணணப்பித்துள்ளார்.

கடந்த மாதம் நேரில் பார்வையிட்டு ஸ்வேதா ஸ்ரீயின் சிலம்பாட்டத்தை ரசித்த ‘பிராவோ இன்டர்நேஷ்னல் புக் ஆப் வேர்ல்டு ரெக்கார்ட்ஸ்’ புத்தகம் ஸ்வேதா ஸ்ரீயை இளம் வயது சாதனையாளராக அங்கீகரித்தது.

இந்த சாதனை சான்றிதழுடன் ஸ்வேதா ஸ்ரீ பெற்றோர் உடன் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து வாழ்த்தும் பெற்றுள்ளனர். 5 வயது சிறுமியின் உலக சாதனையால், பெண் பிள்ளைகள் வீட்டின் பாரமாக அல்லாமல் பெருமை சேர்க்கூடியவர்களாகவும் இருப்பார்கள் என்பதை ஸ்வேதா ஸ்ரீ மற்ற பெற்றோர்களுக்கு நிரூபித்துள்ளார்

தமிழர்களின் கலாச்சார விளையாட்டில் ஒன்றான சிலம்பத்தை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல தமிழக அரசு முன்வர வேண்டுமென சிலம்பாட்ட பயிற்சியாளர் பவித்ராமன் அரசிற்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்