கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு வெட்டுக்கிளிகள் படையெடுப்பா? தொடங்கியது விஞ்ஞானிகளின் ஆய்வு

கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு வெட்டுக்கிளிகள் படையெடுப்பா? தொடங்கியது விஞ்ஞானிகளின் ஆய்வு

ராஜஸ்தான், மத்தியப் பிரதேசத்தைத் தொடர்ந்து தமிழ்நாட்டிற்குள்ளும் வெட்டுக்கிளிகள் நுழைந்துவிட்டதா என அச்சம் எழுந்துள்ளது…

வெட்டுக்கிளிகள் அச்சம் தமிழ்நாட்டிற்கு இல்லை என வரலாற்று ஆய்வுகளை மேற்கோள்காட்டி மாநில வேளாண் துறை அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வெட்டுக்கிளிகள் கூட்டமாகச் செடியில் அமர்ந்திருப்பதும் விவசாயப் பயிர்களிலும் காணப்பட்டுள்ளது.

ஆப்ரிக்கா நாடுகளில் விவசாயப் பயிர்களை நாசமாக்கிய வெட்டுக்கிளிகள் பாகிஸ்தான் வழியாக இந்தியாவிற்குள் நுழைந்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதற்கிடையே இந்த வெட்டுக்கிளிகளால் நாட்டில் பேரழிவு ஏற்படும் என ஐநா எச்சரிக்கை விடுத்துள்ளது.

கோடிக்கணக்கில் இனப்பெருக்கம் செய்து எண்ணிக்கையை அதிகரித்தே செல்லும் இந்த வெட்டுக்கிளிகளால் நாட்டில் உணவுப் பஞ்சம் ஏற்படும் என ஆதாரமற்ற சில எச்சரிக்கைகள் பரவி வருகிறது.

இந்நிலையில், தமிழ்நாட்டில் வெட்டுக்கிளிகள் படையெடுப்பு தொடங்கிவிட்டதாக இணையத்தில் சில புகைப்படங்கள் வைரலாக பரவி வருகின்றன. இது குறித்து தகவல் சேகரித்தபோது அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகின.

அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அடுத்த நேரலகிரி கிராமத்தில் உள்ள செடிகளில் கூட்டம் கூட்டமாக வெட்டுக்கிளிகள் அமர்ந்திருந்ததை அப்பகுதி மக்கள் பார்த்துள்ளனர். சிலர் அதைப் போட்டோ எடுத்து தங்கள் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்.

விவசாயிகள் இந்த வெட்டுக்கிளிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தகவல் அளித்துள்ளனர். தகவலையடுத்து வெட்டுக்கிளிகள் குறித்து வேளாண் அதிகாரிகளைக் கொண்டு ஆய்வுகள் நடத்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது.

இந்த புகைப்படங்களால் தமிழ்நாட்டில் உள்ள விவசாயிகளும் பொது மக்களும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். கொரோனாவை கட்டுப்படுத்துவதிலே தமிழ்நாடு அரசு திணறி வரும் சூழலில் வெட்டுக்கிளிகள் மாநிலத்திற்குச் சவாலாக உருமாறுமா எனக் கேள்வி எழுந்துள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்