பொங்கி சாப்பிட அரிசி வேணும் சாமி! கலெக்டரிடம் கெஞ்சிய மூதாட்டிகள்

பொங்கி சாப்பிட அரிசி வேணும் சாமி! கலெக்டரிடம் கெஞ்சிய மூதாட்டிகள்

கோவை:இலவச பட்டா, வீட்டுமனை, வேலை, உதவித்தொகை…இப்படி கலெக்டர் அலுவலகத்தில் நடக்கும் குறை தீர்க்கும் நாளில், கோரிக்கைகளுக்கு பஞ்சமிருக்காது.இதற்கு மத்தியில், ஒரு மூதாட்டியின் ‘எனக்கு அரிசி வேணும் சாமி’ என்ற வேதனை கலந்த குரல் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தது.பேரூர் வட்டம் பூலுவப்பட்டியை சேர்ந்த மூதாட்டிகள் மூவர், தள்ளாத வயதிலும் குறைதீர் கோரிக்கை மனு பதிவு செய்யும் இடத்தில் நின்று இருந்தனர்.விசாரித்தபோது, ‘பொங்கி சாப்பிட அரிசி வேணும் சாமி; ரேஷன் கடையில தரமாட்டேங்கறாங்க’ என்று, அப்பாவித்தனமாக பதில் வந்தது.முதியோர் உதவித்தொகை வாங்கும் முதியவர்களுக்கு, ரேஷன் கடைகளில், 10 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படுகிறது.

இலவச அரிசி பல முறை கேட்டும், ரேஷன் கடையில் தர மறுப்பதாக எழுதப்பட்ட மனுவை, கையில் வைத்திருந்தனர் மூதாட்டிகள்.நாகம்மாள் எனும் மூதாட்டி கூறுகையில், ”எங்கள் பகுதி ரேஷன் கடையில் இலவச அரிசி தருவதில்லை. கலெக்டரிடம் கூறினோம். நாளை கட்டாயம் கிடைக்கும் என கூறியுள்ளார். 1,000 ரூபாய் உதவித்தொகையிலும், இந்த அரிசியிலும் தான் எங்களுக்கு வாழ்க்கை ஓடுகிறது,” என்றார்.மாவட்ட வழங்கல் அலுவலர் குமரேசன் கூறுகையில், ”புதிதாக முதியோர் உதவித்தொகை பெறுபவர்கள், அதை முறையாக பதிவு செய்தால், இலவச அரிசி இடையூறின்றி கிடைக்கும். சம்பந்தப்பட்ட மூவர், புதிதாக உதவித்தொகை பெறுகின்றனர். அதை பதிவு செய்யாமல், ரேஷன் கடையில் ஸ்மார்ட் கார்டு காண்பித்து, அரிசி கேட்டுள்ளனர். தற்போது, இவர்களுக்கு அரிசி கிடைக்க, உரிய தீர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது,” என்றார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்