சூப்பர் தாராவி…கொரோனாவை புகழ்ந்து தள்ளிய உலக சுகாதார அமைப்பு!!

சூப்பர் தாராவி…கொரோனாவை புகழ்ந்து தள்ளிய உலக சுகாதார அமைப்பு!!

மும்பை தாராவியில் பெரிய அளவில் கொரோனா கட்டுப்படுத்தப்பட்டு இருப்பதற்கு உலக சுகாதார அமைப்பு பாராட்டு தெரிவித்துள்ளது. இந்த அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதனோம் விடுத்து இருக்கும் செய்தியில், ”இத்தாலி, ஸ்பெயின், தென் கொரியா போல் தாராவியிலும் கொரோனா தாக்கம் அதிகமாக இருந்தது. ஆனால் பெரிய அளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

உலக அளவில் கொரோனா தாக்கம் இன்னும் குறைந்தபாடு இல்லை. இந்தியா, அமெரிக்கா, பிரேசில் ஆகிய நாடுகளில் அதிகளவில் பரவி வருகிறது. குறிப்பாக அமெரிக்காவில் இன்னும் இறப்பு விகிதமும் அதிகமாக இருக்கிறது. அந்த வகையில் இந்தியாவில் இறப்பு விகிதம் பெரிய அளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.இந்த நிலையில் ஜெனீவாவில் இருந்து காணொளி காட்சி மூலம் உரை நிகழ்த்திய உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதனோம், ”கடந்த ஆறு வாரங்களாக கொரோனா தொற்று பரவல் இரட்டிப்பாகி உள்ளது. ஆனாலும், சில நாடுகளில் பின்பற்றப்படும் வழிமுறைகளை பார்க்கும்போது, கொரோனாவை கட்டுப்படுத்தலாம் என்ற பாடத்தை அளித்துள்ளது. இதற்கு உதாரணங்களாக இத்தாலி, தென் கொரியா, ஸ்பெயின் மற்றும் மும்பையில் மிகவும் நெருக்கடியான இடத்தில் இருக்கும் தாராவியை குறிப்பிடலாம். இங்கு பரிசோதனை, நோயை கண்டறிதல், தனிமைப்படுத்துதல், சிகிச்சை அளித்தல் என்ற நான்கு முறைகள் பின்பற்றப்பட்டுள்ளன. இதன்மூலம்,தொற்று பரவுதல் தடுக்கப்பட்டு, வைரஸும் அடக்கப்பட்டுள்ளது” என்று பாராட்டு தெரிவித்துள்ளார்.

மும்பை மாநகராட்சி:

ஆசியாவிலேயே மிகப்பெரிய குடிசைப்பகுதி என்று அழைக்கப்படும் தாராவியில் கொரோனா தொற்று பரவியபோது மும்பை மாநகராட்சி விழித்துக் கொண்டது. உடனடியாக செயலில் இறங்கியது. மருத்துவ முகாம்களை அமைத்தது. பரிசோதனையை துரிதப்படுத்தியது, நோயாளிகளை, முதியவர்களை தனிமைப்படுத்தியது. நோயாளிகளுக்கு உணவுகளை வழங்கி அவ்வப்போது பரிசோதனை மேற்கொண்டனர். நோய் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. கடந்த ஏப்ரல் மாதத்தில் 12 சதவீதமாக இருந்த தொற்று பரவல் ஜூன் மாதத்தில் 1.02 சதவீதமாக குறைக்கப்பட்டது. இதற்காக மத்திய சுகாதாரத்துறையும் மும்பை மாநகராட்சியை பாராட்டி இருந்தது. தற்போது ஒன்று என்ற எண்ணிக்கையில் பதிவாகி உள்ளது.

தெர்மல் ஸ்கேன்னர்:

தாராவியில் வசிக்கும் மக்களில் 80 சதவீதம் பேர் பொதுக் கழிப்பிடத்தைத்தான் பயன்படுத்துகின்றனர். 10/10க்கு சதுர அடி இடத்தில் 8, முதல் 10 வரையிலான மக்கள் வசிக்கின்றனர். ஒரு சதுர கி. மீட்டரில் 2,27,136 மக்கள் வசிக்கின்றனர். இங்கு பரிசோதனையில் ஈடுபட்ட தனியார் மருத்துவர்களுக்கு பிபிஇ கிட், தெர்மல் ஸ்கேன்னர், ஆக்சிமீட்டர், மாஸ்க், கையுறை ஆகியவற்றை மும்பை மாநகராட்சி வழங்கி இருந்தது.

”உலகில் இருந்து கொரோனா வைரஸை அவ்வளவு எளிதில் விரட்டி விட முடியாது. பொது முடக்கம் முடிந்த பின்னர் உலக நாடுகள் கவனமாக இருக்க வேண்டும்” என்று உலக சுகாதார அமைப்பின் அவசரகால திட்டத் தலைவர் மைக் ரியான் தெரிவித்து இருந்தார். இதையடுத்து, இந்த அமைப்பின் தலைவரும் தனது கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னதாக காற்றின் மூலமும் வைரஸ் பரவும் என்று அறிவியல் ஆய்வாளர்கள் தெரிவித்து இருந்தனர். இதையும் உலக சுகாதார அமைப்பு உறுதிபடுத்தி இருந்தது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்