முக்கிய நகரங்களில் இயக்கப்படும் அரசு பஸ்களில் பஸ் ஸ்டாப்பை முன்கூட்டியே அறிவிக்க தானியங்கி ஒலிபெருக்கி :தமிழக போக்குவரத்துக்கழகம் திட்டம்

  • In Chennai
  • October 13, 2020
  • 156 Views
முக்கிய நகரங்களில் இயக்கப்படும் அரசு பஸ்களில் பஸ் ஸ்டாப்பை முன்கூட்டியே அறிவிக்க தானியங்கி ஒலிபெருக்கி :தமிழக போக்குவரத்துக்கழகம் திட்டம்

தமிழகத்தில் முக்கிய நகரங்களில் இயக்கப்படும் அரசு பஸ்களில் பயணிக்கும் பயணிகளின் வசதிக்காக, பஸ்ஸ்டாப் குறித்து முன்கூட்டியே அறிவிக்கும் வகையில் தானியங்கி ஒலிபெருக்கி வசதியினை ஏற்படுத்த போக்குவரத்துத்துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். தற்போது இதற்கான பணியில் அவர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தில் அரசு போக்குவரத்துக்கழங்களுக்கு சொந்தமாக சென்னை, திருச்சி, கோவை, மதுரை உள்ளிட்ட இடங்களில் கோட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலமாக சென்னையில் மாநகரப் பேருந்துகள்-3,439, நகரப்பேருந்துகள்-6,636, புறநகர் பேருந்துகள்-7,842, மலைப்பகுதி பேருந்துகள்-497, விரைவுப்பேருந்துகள் மாநிலத்திற்குள்-615, வெளிமாநிலங்களுக்கு-467 என மொத்தம் 19,496 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.இவற்றில் அவ்வப்போது புதிய தொழில்நுட்பங்களை புகுத்துவதற்கும், வருமானத்தை அதிகரிப்பதற்கும் தேவையான நடவடிக்கையில் அரசு போக்குவரத்துக்கழகங்கள் ஈடுப்பட்டு வருகின்றன.
அதன்ஒருபகுதியாக பஸ்களில் பயணிக்கும் பயணிகள் அடுத்த பஸ்ஸ்டாப் குறித்து முன்கூட்டியே தெரிந்து கொள்ளும் வகையில் தானியங்கி ஒலிபெருக்கி வசதியினை ஏற்படுத்த திட்டமிடப்பட்டது. அதன்படி முதற்கட்டமாக சென்னையில் இயக்கப்படும் 75 எம்டிசி பஸ்களில் இந்தவசதி சோதனை அடிப்படையில், ஏற்கனவே ஏற்படுத்தப்பட்டது. பிறகு நடத்துனர் இல்லாமல் இயக்கப்படும் பஸ்களில் ஒருசிலவற்றில் இந்த வசதி அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு பொதுமக்களிடத்தில் நல்ல வரவேற்பு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து இந்தவசதியினை சென்னையில் இயக்கப்படும் பஸ்களில் மேலும் கூடுதலாக அமைக்கவும், மாநிலத்தில் உள்ள பிற முக்கிய நகரங்களில் இயக்கப்படும் அரசு பஸ்களிலும் தானியங்கி ஒலிபெருக்கி வசதியினை விரிவுபடுத்துவதற்கும் அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். அதன்படி தற்போது சென்னையில் இயக்கப்படும் 500 பஸ்களில் தானியங்கி ஒலிபெருக்கி வசதியினை ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான முதற்கட்ட பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதேபோல், மதுரை மண்டலத்தில் இயக்கப்படும் 500 அரசு பஸ்களிலும் தானியங்கி ஒலிபெருக்கி வசதியானது விரைவில் செயல்பாட்டுக்கு வரவுள்ளது.

இதற்காக சம்மந்தப்பட்ட பஸ்களில் ஜிபிஎஸ் ரிசிவர், ஜிபிஎஸ் ஆன்டனா, ஸ்பீக்கர் உள்ளிட்ட கருவிகள் பொருத்தப்படவுள்ளன. இதனைத்தொடர்ந்து மற்ற முக்கிய மாவட்டங்களிலும் இந்த வசதியினை விரிவுபடுத்த அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். இதேபோல் விளம்பரங்களை காட்சிப்படுத்தும் வகையில் அரசு பஸ்களில் டிஜிட்டல் பேனல்கள் பொருத்த திட்டமிடப்பட்டுள்ளது. மதுரை மண்டலத்தில் இயக்கப்படும் 949 பஸ்களில் இந்த பேனல்கள் பொருத்தப்படுகின்றன. மேலும் திண்டுக்கல் மண்டலத்தில் இயக்கப்படும் 309 பஸ்களில் டிஜிட்டல் பேனல்களை பொருத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்போது இதற்கான பணிகள் வேகமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதுகுறித்து போக்குவரத்துத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:சென்னையில் 500 பஸ்களிலும், மதுரையில் 500 பஸ்களிலும் தானியங்கி ஒலிபெருக்கி வசதியினை ஏற்படுத்த முடிவு செய்துள்ளோம். இதில் ஒவ்வொரு பஸ்ஸ்டாப் வருவதற்கு முன்பும் தானியங்கி முறையில் முன்கூட்டியே அறிவிக்கப்படும். மற்ற நேரங்களில் பல்வேறு விதமான விளம்பரங்கள் ஒலிபரப்பப்படும். இதேபோல் மதுரை மண்டலத்தில் 949 பஸ்களிலும், திண்டுக்கல் மண்டலத்தில் 309 பஸ்களிலும் டிஜிட்டல் பேனல்கள் பொருத்தப்படவுள்ளது. இதிலும் விளம்பரங்கள் ஒலிபரப்பப்படும். இதன்மூலம் பொதுமக்கள் எளிதாக அடுத்த பஸ்ஸ்டாப் குறித்து அறிந்துகொள்ள முடியும். மேலும் போக்குவரத்துக்கழகங்களுக்கு வருவாயும் கிடைக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்