“செமஸ்டர் தேர்வுகளை நடத்தமுடியாத சூழல் உள்ளது!” – மத்திய அமைச்சருக்கு முதல்வர் கடிதம்!

“செமஸ்டர் தேர்வுகளை நடத்தமுடியாத சூழல் உள்ளது!” – மத்திய அமைச்சருக்கு முதல்வர் கடிதம்!

செமஸ்டர் தேர்வுகளை நடத்தமுடியாத சூழல் உள்ளது என மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

கரோனா வைரஸ் பரவல் தமிழகத்தில் வேகமெடுத்துள்ளது. இதுவரை தமிழகத்தில் 130261 பேர் பாதிப்படைந்துள்ளனர். 130261 பேர் உயிரிழந்துள்ளனர். 82324 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கரோனா பாதிப்பு காரணமாக பள்ளி, கல்லூரிகள் என அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளது.

இந்நிலையில், கல்லூரி மாணவர்களுடைய இறுதி செமஸ்டர் தேர்வுகளை செப்டம்பர் மாதத்திற்குள் நடத்திமுடிக்க வேண்டும் என பல்கலைக்கழக மானியக் குழு சமீபத்தில் உத்தரவிட்டிருந்தது.அதனை அடுத்து, மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், “கல்லூரிகள், விடுதிகள் கரோனா சிகிச்சை மையங்களாக மாற்றப்பட்டுள்ளதால் செமஸ்டர் தேர்வுகளை நடத்த முடியாத சூழல் உள்ளது. கரோனா பரவல் அதிகமாக உள்ளதால் மாணவர்களுக்கு தேர்வு நடத்துவதில் சிக்கல் உள்ளது. ஆன்லைன் மூலமாகவும் தேர்வு நடத்த முடியாது.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மாணவர்கள் உள்ளதால், அவர்கள் கல்லூரிக்கு வந்து தேர்வு எழுதுவதற்கு சாத்தியமில்லை. செமஸ்டர் தேர்வுகள் குறித்து முடிவெடுக்க மாநில அரசுக்கு அதிகாரம் வழங்க வேண்டும்.” என குறிப்பிட்டுள்ளார். இதனை தனது டிவிட்டர் பக்கத்திலும் பதிவிட்டுள்ளார்.

முன்னதாக 10ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வை ரத்து செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. காலாண்டு, அரையாண்டு தேர்வின் அடிப்படையில் பொதுத்தேர்வு மதிப்பெண்களை வழங்கவேண்டும் என உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்