ராஜாஜி இல்லத்தை ஏராளமானோர் பார்வை

ராஜாஜி இல்லத்தை ஏராளமானோர் பார்வை

ஒசூர்:

மூதறிஞர் ராஜாஜியின் 141வது பிறந்தநாளான இன்று, அவர் பிறந்த இல்லத்தை ஏராளமானோர் பார்த்து வருகின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த தொரப்பள்ளி அக்ரஹாரம் கிராமத்தில் சக்கரவர்த்தி வெங்கடார்யா- சிங்காரம்மா ஆகியோருக்கு டிசம்பர் 10, 1878ம் ஆண்டு மகனாக பிறந்தவர் சக்கரவர்த்தி ராசகோபாலச்சாரி.

இவர் 7 கிமீ தொலைவில் உள்ள ஒசூருக்கு நடந்தே சென்று அரசுப்பள்ளியில் பள்ளிபடிப்பை முடித்து, பின்னர் பெங்களூருவில் சட்டப்படிப்பை முடித்தார்.

இந்திய வழக்கறிஞர், விடுதலைப் போராட்ட வீரர், அரசியல்வாதி, மற்றும் எழுத்தாளர் என பன்முகத்தன்மை கொண்ட இவர் சுருக்கமாக ராஜாஜி என்றும் சி.ஆர் என்றும் அழைக்கப்பட்டவர்.

இந்தியாவின் கடைசித் தலைமை ஆளுநராகப் பணியாற்றியவர், அத்துடன் இந்திய தேசிய காங்கிரசின் தலைவர், சென்னை மாகாணம், சென்னை மாநில முதலமைச்சர், மேற்கு வங்க ஆளுநர், இந்திய ஒன்றியத்தின் உட்துறை அமைச்சர் போன்ற பல பதவிகளிலும் பணியாற்றியுள்ளார்.

பாரத ரத்னா விருதைப் பெற்ற முதல் இந்தியர்களில் ஒருவர். பிற்காலத்தில் ஜவகர்லால் நேருவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக 1959இல் சுதந்திராக் கட்சியை தொடங்கினார். இக்கட்சியுடன் கூட்டணி அமைத்து 1967இல் திராவிட முன்னேற்றக் கழகம் தமிழகத்தில் ஆட்சியை பிடித்தது குறிப்பிடத்தக்கது

கருத்து வேறுபாடுகள் கொண்டிருந்த போதும் பெரியார் ஈ. வே. இராமசாமியுடன் தமது கடைசிக் காலம் வரையில் நட்பு பாராட்டியவர். அணுவாற்றல் போர்க்கருவிகளைக் குறைக்க போராடியவர். ராஜாஜி பிறந்த ஊரான தொரப்பள்ளி அக்ரகாரம் அப்போதைய சேலம் மாவட்டமாக இருந்ததால் அவர் சேலத்து மாம்பழம் என செல்லப் பெயர் கொண்டவர் என அறியப்படுகிறது. 1972 ஆம் ஆண்டு டிசம்பர் 25ல் 94வயதானபோது இயற்கை எய்தினார்

பல்வேறு சிறப்புக்குரிய ராஜாஜி பிறந்து வளர்ந்த தொரப்பள்ளி அக்ரகாரம் கிராமத்தில் உள்ள அவரது வீட்டை மாணவர்கள், அரசியல் தலைவர்கள் பார்த்து வருகின்றனர், அவரது இல்லத்தில் உள்ள உருவசிலைக்கு தமிழக அரசின் சார்பில் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் பிரபாகரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இராஜாஜி பிறந்து வளர்ந்த வீட்டை நினைவு இல்லமாக மாற்றி தமிழக அரசு சார்பில் பராமரிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்