தமிழகத்திலும் ‘ரேபிட் ஆன்டிஜன் டெஸ்ட்’; மாநில அரசுக்கு ஐசிஎம்ஆர் பரிந்துரை?

தமிழகத்திலும் ‘ரேபிட் ஆன்டிஜன் டெஸ்ட்’; மாநில அரசுக்கு ஐசிஎம்ஆர் பரிந்துரை?

கொரோனா தொற்றை, 20 நிமிடங்களில் கண்டறிய, டில்லியில் செய்யப்படும், ‘ரேபிட் ஆன்டிஜன்’ பரிசோதனைகளை, தமிழகத்திலும் மேற்கொள்ளும்படி அறிவுறுத்த, இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனமான, ஐ.சி.எம்.ஆர்., முன்வந்துள்ளது.தலைநகர் டில்லியில், கொரோனா தொற்று தீவிரமடைந்ததால், அறிகுறி இல்லாதவர்களுக்கு, தொற்று உள்ளதா, இல்லையா என சோதித்து கொள்ள, ‘ரேபிட் ஆன்டிஜன்’ பரிசோதனை அவசியம் என தீர்மானித்து, மளமளவென மாநில அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. ரேபிட் ஆன்டிஜன் பரிசோதனையில், கொரோனா தொற்று இருக்கிறதா, இல்லையா என்பதை, 20 நிமிடங்களில் கண்டறியலாம். இதனால், தினமும், 10 ஆயிரம் பேருக்கும் அதிகமாக, டில்லியில் இந்த வகையான பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.டில்லியில் ஒரு வாரத்தில், ஒரு லட்சம் பேருக்கு மேல், ரேபிட் ஆன்டிஜன் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.நிலவும் அச்சத்தை போக்க, இந்த சோதனை உதவுவதாக, டில்லி மாநில அரசு கருதுகிறது.இதை அறிந்த, விருதுநகர் எம்.பி., மாணிக்கம் தாகூர், நேற்று டில்லியில், ஐ.சி.எம்.ஆர்., டைரக்டர் ஜெனரல் பல்ராம் பார்கவாவை சந்தித்துப் பேசினார். அப்போது, தன் விருதுநகர் லோக்சபா தொகுதியில், தொற்று அதிகரித்து வருவதால், ரேபிட் ஆன்டிஜன் பரிசோதனைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கும்படி வேண்டினார்.இந்த சந்திப்பு குறித்து, மாணிக்கம் தாகூர் கூறியதாவது: கொரோனா தொற்றை விட, அது குறித்த அச்சமே, மக்களை ஆட்டிப் படைக்கிறது. தங்களுக்கு தொற்று உண்டா, இல்லையா என தெரிந்து கொள்ள, ஒவ்வொருவரின் மனமும் துடிக்கிறது. விருதுநகர் உள்பட தென் மாவட்டங்களில், நிலைமை கைமீறுமோ என்ற நிலை இருப்பதால், சோதனைகளை அதிகரிப்பதே ஒரே வழி.அந்த வகையில், என் கோரிக்கையை ஏற்ற, பல்ராம் பார்கவா, ‘தமிழகத்திலும், ரேபிட் ஆன்டிஜன் பரிசோதனைகளை மேற்கொள்ளும்படி வலியுறுத்தி, தலைமை செயலருக்கு கடிதம் எழுதுகிறேன்’ என, தெரிவித்துள்ளார். இவ்வாறு, மாணிக்கம் தாகூர் கூறினார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்