வீட்டில் பயன்படுத்தக்கூடிய பொருள்களைக் கொண்டு தானியங்கி சானிடைசர் கருவி உருவாக்கிய பொறியியல் மாணவர்

வீட்டில் பயன்படுத்தக்கூடிய பொருள்களைக் கொண்டு தானியங்கி சானிடைசர் கருவி உருவாக்கிய பொறியியல் மாணவர்

கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் அனைவரும் முகக்கவசமும் கையுறையும் அணிதல், கைகளை சுத்தப்படுத்துதல், சானிடைசர் பயன்படுத்துதல் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மக்களுக்கு அரசுகள் வலியுறுத்தி வருகின்றன.

இந்நிலையில், இன்றைக்கு பலரும் சானிடைசர் பயன்படுத்துகின்றனர். ஒருவர் பயன்படுத்தியதை மற்றவர்கள் பயன்படுத்தாமல் இருக்கும் வகையில் கால்களைக் கொண்டு இயக்கப்படும் சானிடைசர் இயந்திரங்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ள நிலையில், கைகளை நீட்டினால் சானிடைசர் விழும் வகையிலான சென்சார் தானியங்கி சானிடைசர் கருவியை வெறும் ரூ.550 செலவில் தயாரித்து அசத்தியுள்ளார் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியைச் சேர்ந்த அபிஷேக்.கோவில்பட்டி வீரவாஞ்சி நகரைச் சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவரது மகன் அபிஷேக். இவர் நெல்லையில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் எலக்ட்ரானிக் கம்யூனிகேசன் பிரிவில் 2ம் ஆண்டு படித்து வருகிறார். தனது தந்தை நடத்தி வரும் பேன்சி ஸ்டோருக்குச் செல்லும் போது பலரும் சானிடைசர் வாங்கிச் செல்வதைப் பார்த்த அபிஷேக், மக்கள் மற்றும் தொழிற்சாலைகளில் எளிமையான முறையில், தொற்று பரவல் இல்லாத வகையில் சானிடைசரைப் பயன்படுத்தும் வகையில் இந்த சென்சார் தானியங்கி சானிடைசர் கருவியை உருவாக்கியுள்ளார்.

வீட்டில் பயன்படுத்தக் கூடிய காட்போர்டு, வாட்டர் கேன், அதன் மேல் மூடி ஆகியவற்றுடன் ஐ.ஆர். சென்சார், டிரான்ஸ்சிஸ்டர் மற்றும் பம்ப் மோட்டார் இணைத்து இந்தக் கருவியை உருவாக்கியுள்ளார். சென்சார் பொருத்தப்பட்டுள்ளதால் கைகளை நீட்டினால் போதும் தானாகவே 6 மில்லி அளவு சானிடைசர் கையில் கொட்டும். 1200 மில்லி கொள்ளளவு கொண்ட இந்தத் தானியங்கி சானிடைசர் இயந்திரத்தை 200 பேர் பயன்படுத்தலாம்.

அளவீடு பார்வையிடும் வசதியுடன் இக்கருவி தயாரிக்கப்பட்டுள்ளது.

கருவியில் எவ்வளவு அளவு சானிடைசர் உள்ளது என்பதைப் பார்ப்பதற்கு அளவீடு பார்வையிடும் வசதியும் உள்ளது. இந்தக் கருவி மின்சாரம் மற்றும் பேட்டரி மூலமாக இயங்கும். இது குறித்து மாணவர் அபிஷேக் கூறுகையில், கொரோனா தொற்று பரவி வரும் நிலையில் மக்கள் பரவலாகப் பயன்படுத்தி வரும் சானிடைசரை எளிதில் பயன்படுத்தும் வகையிலும், வீணாகாமல் பயன்படுத்தவும் இக்கருவியை உருவாக்கியுள்ளது என்றார்.

ஒருவர் பயன்படுத்தியை மற்றொருவர் பயன்படுத்தக் கூடாது என்று கூறப்படும் நிலையில், மக்களுக்கு இது பாதுகாப்பான கருவியாக இருக்கும். தற்பொழுது காட்போர்டில் உருவாக்கியுள்ளேன். தேவைப்பாட்டால் பிளாஸ்டிக் கொண்டும் உருவாக்க முடியும். தேவைக்கு ஏற்ப இதன் கொள்ளளவை மாற்றி அமைக்கலாம். வணிக நிறுவனங்கள், ஹோட்டல்கள், மருத்துவமனைகள், பஸ்கள் என எங்கு வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். இதை மேம்படுத்தி தேவையான கருவிகளைத் தயாரித்துக் கொடுக்க தயாராக உள்ளேன் என்றார்.

இன்று உலகை அச்சுறுத்தும் கொரோனா பரவுவதைத் தடுக்க பலரும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வரும் நிலையில் மாணவர் அபிஷேக்கின் இந்த முயற்சி வரவேற்கத்தக்கது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்