அதிக விலைக்கு அரிசி விற்பனை – ஆலைக்கு சீல் வைத்து சார் ஆட்சியர் அதிரடி

அதிக விலைக்கு அரிசி விற்பனை – ஆலைக்கு சீல் வைத்து சார் ஆட்சியர் அதிரடி

தருமபுரியில் ஊரடங்கு நேரத்தில் அதிக விலைக்கு அரிசியை விற்ற ஆலைக்கு சார் ஆட்சியர் சீல் வைத்தார்.

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்திலும் ஊரடங்கு உத்தரவு கடுமையாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. மளிகைக் கடைகள் மற்றும் பெட்ரோல் பங்குகளுக்கு கூட நேரக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் ஊரடங்கு உத்தரவை பயன்படுத்தி யாரும் அத்தியாவசியப் பொருட்களை அதிக விலைக்கு விற்கக்கூடாது என அரசு எச்சரித்திருக்கிறது.

இந்நிலையில் தருமபுரி மாவட்டம் அரூரில் உள்ள தனியார் அரிசி அரைவு ஆலை ஒன்றில் அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட ஆட்சியருக்கு புகார் வந்தது.

இந்தப் புகாரை அடுத்து மாவட்ட ஆட்சித் தலைவர் சு.மலர்விழி உத்தரவின்பேரில், அரூர் சார் ஆட்சியர் மு.பிரதாப் தனியார் ரைஸ்மில்லுக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார். விசாரணையில் ஒவ்வொரு அரிசி மூட்டையும் கூடுதலாக 150 முதல் 200 ரூபாய் வரை உயர்த்தி விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அந்த அரிசி ஆலைக்கு, அரசு விதிகளை மீறி அத்தியாவசிய பொருட்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்ததாக கூறி, சார் ஆட்சியர் மு.பிரதாப் சீல் வைத்தார்.

இதுபோன்ற காலகட்டத்தில் வணிகர்கள் பொதுமக்களுக்கு உதவும் நோக்கத்தில் இருக்க வேண்டுமே, தவிர வியாபார நோக்கத்தில் செயல்படக்கூடாது எனவும் அவர் கேட்டுக்கொண்டார். அரசின் விதிகளை மீறி யாரேனும் விலையை உயர்த்தி அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்தால் அவர்கள் கடுமையான தண்டிக்கப்படுவார்கள் எனவும், எனவே உரிய விலைக்கு விற்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்