8 நாளாச்சு.. இந்த தாயின் கண்ணீர் எப்போது தீரும்.. குட்டியின் சடலத்தை விட்டு நகராமல் நிற்கும் யானை!

8 நாளாச்சு.. இந்த தாயின் கண்ணீர் எப்போது தீரும்.. குட்டியின் சடலத்தை விட்டு நகராமல் நிற்கும் யானை!

8 நாளாச்சு.. இறந்துபோன தன் குட்டியின் சடலத்தின் பக்கத்திலேயே நின்று கொண்டிருக்கிறது தாய் யானை.. யாரும் அருகில் செல்ல முடியாமலும், இறந்த சடலத்தை மீட்க கூட முடியாமலும் வனத்துறையினர் தவித்து வருகின்றனர். ஆனாலும் தூரமாக உள்ள மரங்களில் உட்கார்ந்து கொண்டு பைனாகுலர் மூலம் தாய் யானையையும், அதன் சடலத்தையும் கண்காணித்து வருகிறார்கள்!

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே கொச்சுக்குன்னு என்ற பகுதி உள்ளது… இந்த இடத்தில் கடந்த 17ம் தேதியன்று திடீரென யானைகள் பிளிறும் சத்தம் கேட்டது. அதனால் அங்கிருக்கும் தோட்ட தொழிலாளர்கள் ஓடிவந்தனர்… அப்போது ஒரு தேயிலை தோட்டத்துக்கும், காட்டுப்பகுதிக்கும் நடுவில் ஒரு சதுப்பு நிலத்தில் உள்ள புதரில் 3 யானைகள் நின்றிருந்தன…

அதில் ஒரு யானை மட்டும் அழுதுகொண்டே இருந்தது.

புதரின் சேற்றில் சிக்கி புதைந்து போன நிலையில் குட்டி யானை ஒன்று இறந்து கிடந்தது. திடீரென பொதுமக்கள் திரண்டு வந்துவிட்டதால், யானைகள் மிரண்டுவிட்டன.. அதனால் அவர்களை திடீரென துரத்தியது. தகவலறிந்து கூடலூர் வனத்துறையினர் வந்ததும், அவர்களின் ஜீப்பையும் தாய் காட்டு யானை ஆக்ரோ‌ஷமாக துரத்தியது… இதனால் வனத்துறையினரால் குட்டி யானையின் சடலத்தை அப்புறப்படுத்த முடியாமல் திணறினர். உடனே பட்டாசுகளை கொளுத்தி போட்டனர்.. ஆனாலும் தாய் யானை அசராமல் அங்கேயே நின்றது.. கண்ணீர் விட்டபடியே அழுதபடியே இருந்தது.

இந்நிலையில், கடந்த 17ம் தேதி அன்று இரவே குட்டி யானையின் உடலை செந்நாய்கள் கூட்டம் கடித்து தின்றுவிடவும், அந்த யானைகுட்டி சடலம் குதறிய நிலையில் ஆகிவிட்டது.. அப்போதும் அந்த தாய் யானை அங்கிருந்து நகராமல் பக்கத்திலேயே அழுதபடி இருந்தது.. கிட்டத்தட்ட ஒருவாரமாக அந்த தாய் யானை எதுவுமே சாப்பிடவில்லை.. அந்த யானையுடன் இருந்த மற்ற யானைகள் காட்டுக்கே திரும்பி சென்றுவிட்ட நிலையில் தாய் யானை மட்டும் அங்கேயே நின்று அழுது கொண்டிருக்கிறது.

அதே சமயம் யாராவது பக்கத்தில் வந்து குட்டியை தூக்கி கொண்டு போய்விடுவார்களோ என்று பயந்து, சுற்றுமுற்றும் பார்த்தபடியே உள்ளது.. தாய் யானையின் இந்த பாசப் போராட்டம் அந்த பகுதி மக்களை நிலைகுலைய வைத்து வருகிறது. இந்த யானை எதுவுமே சாப்பிடாமல் உள்ளதால், கவலை அடைந்த அந்த பகுதி மக்கள், தர்பூசணி போன்ற பழங்களை அந்த யானை பக்கத்தில் வைத்து விட்டு வந்தனர். ஆனாலும் அதையும் யானை சாப்பிடாமலேயே இருந்தது.

இப்போது சடலம் அருகேயே உள்ள பசுந்தழைகளை தாய் யானை சாப்பிட ஆரம்பித்துள்ளது.. எனினும் இரவு பகலாக தாய் யானையின் நடமாட்டத்தை வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். யாராவது அருகில் சென்றால், உடனே தாய் யானை குட்டியின் சடலம் அருகே வந்து நின்று கொள்கிறதாம்.. சில சமயம் விரட்டி அடிக்கிறதாம்.. அதனால் அருகில் செல்லாமல், 500 மீட்டர் தொலைவில் உள்ள மரங்களில் ஏறி வனத்துறையினர் உட்கார்ந்துகொண்டு, பைனாகுலர் மூலம் தாய் யானையின் நடமாட்டம், அதன் செயல்களை கண்காணித்து வருகின்றனர்.

தாரை தாரையாய் கண்ணில் நீர் வழிய 8வது நாளாக விடிய விடிய நின்று கொண்டிருக்கும் இந்த தாய் பாசம் நம்மை மிரள வைத்து வருகிறது!!

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்