சென்னை ஒருகிலோ மீட்டர் வரை கடலில் மூழ்கும் அபாயம்

  • In Chennai
  • October 17, 2020
  • 226 Views
சென்னை ஒருகிலோ மீட்டர் வரை கடலில் மூழ்கும் அபாயம்

கடல் நீர்மட்டம் உயர்ந்து வருவதன் காரணமாக சென்னையில் கடலை ஒட்டி ஒரு கிலோமீட்டர் தொலைவுக்குள் அமைந்துள்ள இடங்கள் கடலில் மூழ்கும் அபாயம் உள்ளது,” என்று ஆய்வு ஒன்று அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. வாகனங்களின் பெருக்கம், தொழிற்சாலைகள் அதிகரிப்பு போன்ற காரணங்களால் காற்றில் கூடும் கார்பனால், சுற்றுசூழல் பாதிக்கப்பட்டு வருவதுடன், பருவநிலை மாற்றமும் ஏற்பட்டு வருகிறது.கடலோர பகுதிகள் குறித்த ஆய்வுகளை மேற்கொள்ளும் தேசிய மையம் (என்.சி.சி.ஆர்.) சமீபத்தில் மேற்கொண்ட ஆய்வில்தான் இந்த அதிர்ச்சி தகவல் தெரிய வந்துள்ளது. சென்னை துறைமுகத்தில் இருந்து நீலாங்கரை வரையிலான 21.48 கி.மீ. தொலைவுக்கு கடற்கரையை ஒட்டிய பகுதிகளில் மேற்கொண்ட ஆய்வில் தெரிய வந்துள்ள அதிர்ச்சி தகவல்கள் வருமாறு: பருவநிலை மாற்றத்தின் காரணமாக சென்னையில் அடுத்த ஐந்து ஆண்டுகளில் கடல் நீர்மட்டம் 7 சென்டிமீட்டர் அளவுக்கு உயரும் அபாயம் உள்ளது. இந்த அபாயம் நேர்ந்தால், சென்னையில் கடற்கரையை ஒட்டி 100 மீட்டர் தொலைவில் அமைந்துள்ள நிலப்பகுதிகள் முழுவதும் 2025ம் ஆண்டுக்குள் கடலில் மூழ்கும் நிலை ஏற்படும்.

இதே நிலை நீடித்தால், அடுத்த 80 ஆண்டுகளுக்குள் அதாவது 2100ம் ஆண்டுக்குள் சென்னையில் கடல் நீரின் மட்டம் 77.88 சென்டிமீட்டர் அளவுக்கு அதிகரிக்கும். இதன் விளைவாக ஏற்படும் வெள்ள பெருக்கால் கடலோர பகுதியில் இருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவுக்குள் அமைந்துள்ள நிலப்பரப்புகளை கடல் விழுங்கும் அபாயம் உள்ளது. கடல் நீர்மட்டம் அதிகரித்து வருவதன் விளைவாக, நீலாங்கரை மற்றும் அடையாறு முகத்துவார பகுதிகளை ஒட்டி அமைந்துள்ள நிலப்பரப்புகள் எதிர்காலத்தில் கடலுக்குள் மூழ்கும் அபாயம் உள்ளது. இந்த பகுதிகளின் அமைவிடம், மண்ணின் தன்மை போன்ற காரணிகளால் இப்பகுதிகளை ஒட்டி அமைந்துள்ள சொகுசு பங்களாக்கள் உள்ளிட்ட குடியிருப்பு பகுதிகளையும் கடல் நீர் விழுங்கும் ஆபத்து இருக்கிறது.

நீலாங்கரை, அடையாறு முகத்துவாரம் ஆகிய பகுதிகளை ஒப்பிடும்போது மெரீனா கடற்கரையை ஒட்டிய பகுதிகளில் கடல் நீர் உட்புகும் ஆபத்து தற்போதைக்கு குறைவு என்பது சற்று ஆறுதலான செய்திதான்.மெரீனாவையொட்டி, சில மீட்டர்கள் தூரம் வரை மணல் பரப்பாக உள்ளதே இதற்கு காரணம். ஆனால், பருவநிலை மாற்றத்தை கட்டுப்படுத்தி, கடல் நீர்மட்டம் உயர்வை தடுக்காவிட்டால் எதிர்காலத்தில் மெரீனாவை ஒட்டிய பகுதிகளும் கடலில் மூழ்கும் நிலை ஏற்படக்கூடும் என்று அந்த ஆய்வு எச்சரித்துள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்