விடாமல் துரத்தும் கொரோனா தமிழகத்தில் இறுதியாண்டு மாணவர்கள் 4லட்சம் பேரின் எதிர்காலம் கேள்விக்குறி

விடாமல் துரத்தும் கொரோனா தமிழகத்தில் இறுதியாண்டு மாணவர்கள் 4லட்சம் பேரின் எதிர்காலம் கேள்விக்குறி

வேலைவாய்ப்புக்கு உத்தரவாதம் இல்லாமல் தவிப்பு
சேலம்: கொரோனா ஊரடங்கால் தமிழகத்தில் இறுதியாண்டு படித்து வரும் 4 லட்சம் கல்லூரி மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. நாடு முழுவதும் கோரதாண்டவம் ஆடிவரும் கொரோனா நோய் தொற்று, அனைத்து தரப்பு மக்களின் வாழ்க்கையையும் புரட்டி போட்டுள்ளது. இதற்கு கல்லூரி மாணவர்களும் விதிவிலக்கு இல்லை என்பதற்கு ஏற்ப, லட்சக்கணக்கானோரின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 500க்கும் மேற்பட்ட இன்ஜினியரிங் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. அத்துடன் மாநில பல்கலைக்கழகங்களுடன் இணைவுபெற்ற 1,300க்கும் அதிகமான கலை, அறிவியல் கல்லூரிகளும் இயங்கி வருகின்றன.இதுதவிர, பல்கலைக்கழகங்கள், பாலிடெக்னிக் மற்றும் கல்வியியல் கல்லூரிகள், ஐடிஐ மற்றும் தொழில்நுட்ப பயிற்சியகம் என 500க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.
வழக்கமாக, ஏப்ரல், மே மாதங்களில் உயர்கல்வி நிறுவனங்களில் கல்வியாண்டின் இரண்டாம் கட்ட பருவத்தேர்வு நடத்தப்பட்டு, அடுத்த ஓரிரு மாதங்களில் முடிவுகள் வெளியிடப்படும். அதற்கு முன்னதாகவே, பல கல்வி நிறுவனங்களில் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு, இறுதியாண்டு பயிலும் மாணவர்கள் பலருக்கும் பணியாணை வழங்கப்பட்டுவிடும். ஆனால், நடப்பாண்டு கொரோனா வைரஸ் தாக்கத்தால், ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இதனால், இறுதியாண்டு படித்துவந்த சுமார் 4 லட்சம் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.

இதுகுறித்து கல்வியாளர்கள் கூறியதாவது: கல்லூரி படிப்பை முடிந்து வேலைக்கு செல்லும் தருணம் மாணவர்களின் இறுதியாண்டுதான். அவர்களின் தற்போதைய எண்ணங்கள், ஆசை,கனவு,ஆர்வம், விருப்பம் ஆகியவைதான் எதிர்கால வாழ்க்கையை நிர்ணயிக்கும். ஆனால், நடப்பாண்டு கொரோனா வந்து, லட்சக்கணக்கான இளைஞர்களின் கனவுகளை கேள்விக்குறியாக்கியுள்ளது. தமிழகத்தில் இன்ஜினியரிங்,கலை மற்றும் அறிவியல், பாலிடெக்னிக், ஐடிஐ, பிஎட், எம்பில் மற்றும் இதர படிப்புகள் என சுமார் 4 லட்சம் மாணவர்கள், ஆண்டுதோறும் கல்லூரி படிப்பை முடித்து பணி வாய்ப்புக்களுக்கு செல்கின்றனர். ஆனால் இந்த கொரோனா ஊரடங்கு, மாணவர்கள் மட்டுமின்றி அவர்களது பெற்றோர், உறவினர்கள் மற்றும் அவர்களை சார்ந்தோரின் எதிர்பார்ப்புகளை தவிடுபொடியாக்கிவிட்டது.

ஒருசில கல்லூரிகளில் வேலைவாய்ப்பு முகாம் நடத்தி பணியாணை வழங்கியிருந்தாலும், அதற்கும் தற்போது பலனில்லாமல் போனது. நாட்டில் உள்ள பல நிறுவனங்கள் கொரோனாவை காரணம் காட்டி, ஏற்கனவே பணிபுரிந்து வரும் தங்களது பணியாளர்களை வெளியேற்றும் நடவடிக்ைககளில் ஈடுபட்டு வருகின்றன. இந்த அசாதாரண சூழ்நிலையில்,கல்லூரி படிப்பை நிறைவு செய்ய முடியாமல் தவிக்கும் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு என்பது கேள்விக்குறி தான்.காலத்தை வீணாக்காமல் சுய தொழில் தொடங்கும் முயற்சியில் ஈடுபட்டாலும், அதற்கான முதலீடு, வங்கி கடன் மற்றும் இதர தேவைகளை பூர்த்தி செய்துகொள்ள,தற்போதுள்ள சூழ்நிலை அவர்களுக்கு ைக கொடுப்பதில்லை. இதனால்,பெற்றோருடன் விவசாயம் மற்றும் கிடைத்த தினக்கூலி பணிகளை செய்யும் நிலைக்கு மாணவர்கள் தள்ளப்பட்டுள்ளனர். எனவே, லட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, அவர்களுக்கான வேலைவாய்ப்பு நடவடிக்கைகளில தமிழக அரசு ஈடுபட வேண்டும். இவ்வாறு கல்வியாளர்கள் தெரிவித்தனர்.

* தமிழகத்தில் 500க்கும் மேற்பட்ட இன்ஜினியரிங் கல்லூரிகளும், 1,300க்கும் அதிகமான கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளும் செயல்பட்டு வருகின்றன.
* பல்கலைக்கழகங்கள்,பாலிடெக்னிக், ஐடிஐ, மருத்துவம் சார்ந்த படிப்புகள் என 100க்கும் மேற்பட்ட உயர்கல்வி நிறுவனங்கள் உள்ளன.
* ஆண்டுதோறும் சராசரியாக 4 லட்சம் மாணவர்கள்,உயர்கல்வி படிப்பை முடித்து வெளியேறுகின்றனர்.
n நாட்டிலேயே அதிகபட்சமாக,தமிழகத்தில் தான் உயர்கல்வி படிப்போரின் எண்ணிக்கை 50 சதவீதத்தை நெருங்கியுள்ளது.

போட்டித் தேர்வுகளுக்கு தயாராக சிறந்த வாய்ப்பு
ரயில்வே, தபால் துறை உள்ளிட்ட மத்திய அரசுப்பணிக்கான தேர்வு, டிஎன்பிஎஸ்சி, ஆசிரியர் தகுதித் தேர்வு, வங்கி தேர்வு உள்ளிட்ட பல்வேறு போட்டித்தேர்வுகளுக்கு தமிழக மாணவர்கள் தயார்படுத்தி வருகின்றனர். ஆனால், கொரோனா ஊரடங்கு காரணமாக போட்டித்தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இவை மீண்டும் எப்போது நடத்தப்படும் என்பதே தெரியாத சூழ்நிலை நிலவி வருகிறது. இந்த காலகட்டத்தை மாணவர்கள் தங்களுக்கான வாய்ப்பாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என கல்வியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

தற்காலிக சான்றிதழ் வழங்க நடவடிக்கை
ஆத்தூர் அறிஞர் அண்ணா அரசு கல்லூரியில் எம்எஸ்சி இயற்பியல் படிக்கும் மாணவர் எலைஜா என்பவர் கூறுகையில், ”இந்த கொரோனா கால ஊரடங்கால், செய்முறை தேர்வுக்கான பயிற்சி, கல்வி சார்ந்த தொடர்பு போன்றவற்றிற்கு வாய்ப்பில்லாமல் போனது. மேலும், அடுத்தடுத்து உயர்கல்வி படிக்க முடியுமா என்ற ேகள்வியும் எழுந்துள்ளது. படிப்பை நிறைவு செய்யாததால், பணி வாய்ப்பு வழங்க பல நிறுவனங்கள் தயக்கம் காட்டுகின்றன. பள்ளி மாணவர்களை போல ஆல்பாஸ் செய்யாவிட்டாலும், கல்லூரி மாணவர்கள் படித்து வரும் படிப்பிற்கான தற்காலிக சான்றிதழ் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும். மேலும், அதனை வைத்தே பணி வழங்க, தனியார் நிறுவனங்களுக்கு பரிந்துரை செய்ய வேண்டும்,” என்றார்.

பகுதிநேர வேலை வாய்ப்புக்கும் தடை
தமிழக கல்லூரி மாணவர்கள் பலர்,படித்துக்கொண்டே பகுதிநேர வேலைவாய்ப்புகளிலும் கவனம் செலுத்தி வந்தனர். குறிப்பாக, அரசு கல்லூரி மாணவர்களுக்கு பகுதி நேர வேலைவாய்ப்பின் மூலம் கிடைக்கும் பொருளாதாரம், அவர்களின் குடும்பத்தை நடத்த பெரிதும் உதவிகரமாக இருந்தது. ஆனால், கொரோனா ஊரடங்கு, கல்வி நிறுவனங்கள் மூடல்,வணிக மற்றும் வர்த்தக நிறுவனங்களுக்கு விடுமுறை உள்ளிட்ட காரணங்களால்,கடந்த 3 மாதமாக அவர்களின் பகுதிநேர வேலைவாய்ப்பு தடைபட்டுள்ளது. இதேபோல்,சுப நிகழ்ச்சிகள் எதுவும் நடக்காததால், கேட்டரிங் பணியில் ஈடுபட்டு வந்த மாணவர்களும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், கிராமப்புறங்களில் கிடைத்த விவசாய பணிகளுக்கு செல்லும் நிலைக்கு,கல்லூரி மாணவர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்