காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளரான குஷ்புக்கு தமிழக செயல்தலைவர் பதவி கொடுக்க உள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில் அவர் திடீரென நேற்றிரவு டெல்லி புறப்பட்டு சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காரணம் அவர் டெல்லியில் இன்று பாஜகவில் இணைய உள்ளதாக பரவி வரும் தகவல் தான். குஷ்பு காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணையவுள்ளார் என்று சில மாதங்களாகவே தகவல்கள் பரவி வருகிறது. எனினும் அந்த தகவலுக்கு குஷ்பு தொடர்ச்சியாக மறுப்பு தெரிவித்து வருகிறார்.
இந்த நிலையில் மீண்டும் குஷ்பு டெல்லிக்கு புறப்பட்டுச்சென்றுள்ளார்.ஆனால் இந்த முறை தனது கணவரான திரைப்பட இயக்குநர் சுந்தர்.சியையும் அழைத்துச்சென்றுள்ளார். இன்று குஷ்பு, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா முன்னிலையில் பாஜகவில் குஷ்பு இணைகிறார் தகவல்கள் பரவி வருகிறது.
டெல்லி செல்லும் முன்பாக சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், பாஜகவில் இணையத்தான் டெல்லி செல்கிறீர்களா? என்ற கேள்விக்கு ‘நோ கமெண்ட்ஸ்’, நான் எதுவும் சொல்ல விரும்பவில்லை என்று பதிலளித்தார் குஷ்பு.
ஆனால், குஷ்பு காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைவதற்காகவே டெல்லி புறப்பட்டுச் சென்றதாக அரசியல் வட்டாரங்கள் தரப்பில் கூறப்படுகிறது.
குஷ்பு பாஜகவில் இணைவதற்காக தமிழக பாஜக தலைவர் முருகனிடம் பேச்சுவார்த்தை நடத்தியதாக ஏற்கெனவே தகவல் வெளியானது. இதற்கு மறுப்பு தெரிவிக்காத எல்.முருகன், ‘குஷ்பு பாஜகவில் இணைந்தால் வரவேற்போம்’ என பதிலளித்தார்.